கொடைக்கானல் அடுக்கம் பகுதியில் மீண்டும் மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தென்மேற்கு பருவமழை முடிவடையும் தருணத்தில் கொடைக்கானல் அடுக்கம் பகுதியில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு, நிலச்சரிவு ஏற்பட்டிருந்தது. அதன் காரணத்தால் சுற்றுலாப் பயணிகள் அந்த வழிப் பாதையைப் பயன்படுத்தத் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள இந்த நேரத்தில் நேற்று (15.11.2021) இரவு பெய்த கனமழை காரணமாக இந்தப் பகுதியில் அடுக்கத்தைத் தாண்டி பெரியகுளம் செல்லும் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு ராட்சத பாறை சாலையில் உருண்டு விழுந்துள்ளது. இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் அந்தப் பாதை வழியாகச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்ததால் யாரும் இந்த விபத்தில் சிக்காமல் நல்வாய்ப்பாகத் தப்பியுள்ளனர். இந்தப் பகுதியில் உள்ள அடுக்கம், பாலமலை, சாமகாட்டுப்பள்ளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தோட்ட பகுதிகளுக்குச் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரியகுளம் பகுதியிலிருந்து அடுக்கம் பகுதியில் உள்ள தோட்டங்களில் கூலிவேலை செய்ய வருபவர்களும் போக்குவரத்து இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைப்பு பணியில் இறங்கியுள்ளனர்.