திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் நடைபாதை வியாபாரிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்வதை ஒழுங்கு முறைபடுத்த கோரிய மனுவினை முடித்து வைத்து உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூரை சேர்ந்த முத்துராஜ் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் சுண்டல், டீ, சமோசா உள்ளிட்ட பொருட்களை அப்பகுதியை சேர்ந்த ஏழை வியாபாரிகள் 100 க்கும் மேற்பட்டோர் விற்று வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவர்களிடம் வாங்கி பயன்பெறுவர். கோவில் வளாகத்தில் விற்பனை செய்பவர்களிடம் நாள்தோறும் கட்டணம் வசூல் செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் ஒருவருக்கு ஏலம் விடப்படும்.
இதில் ஏலம் எடுத்தவர் சுண்டல் உள்ளிட்டவைகளை வியாபாரம் செய்யும் நபர்களிடம் விதிமுறை படி நாள்தோறும் நிர்ணயிக்கபட்ட குறிப்பிட்ட கட்டணத்தை வசூல் செய்வர்.ஆனால் கோவில் வளாகத்தில் சுண்டல், டீ விற்பனை செய்வவர்களிடம் கட்டணம் வசூல் செய்வதற்கு 2018 மே மாதம் 2 ஆம் தேதி ஒருவர் ஏலம் எடுத்துள்ளார்.
தற்போது ஏலம் எடுத்த ஏலத்தாரர்கள் கோவில் வளாகத்தில் டீ, சுண்டல் விற்பனை செய்பவர்களிடம் நாள் தோறும் குறிப்பிட்ட கட்டணம் வசூல் செய்யாமல் அவர்கள் விற்பனைக்கு வைத்துள்ள பொருட்கள் அடிப்படையில் அதிக கட்டணம் வசூல் செய்கிறார். இதனால் வியாபாரிகள் நஷ்டம் அடைகின்றனர். எனவே திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம் நடைபாதை வியாபாரிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்வதை ஒழுங்கு முறைபடுத்த உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் " என மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ்,சதீஷ்குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "இந்த சம்பவம் தொடர்பாக, ஒப்பந்ததாரர் இதே நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்து மனு விசாரணையில் உள்ளது. அந்த மனுவில் தற்போது உள்ள கோரிக்கை குறித்து கூடுதல் மனு தாக்கல் செய்து உரிய நிவாரணம் பெறலாம் எனகூறி வழக்கை முடித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.