கஜா புயலால் பாதிப்புக்கு உள்ளான வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் வரி வசூலை 6 மாதங்களுக்குத் தள்ளிவைக்க வேண்டுமென வர்த்தகர் சங்கத்தினர் கோரிக்கை விட்டிருக்கிறார்கள்.
இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் ஆகியோருக்கு வேதாரண்யம் வர்த்தகர்கள் சங்கத்தலைவர் எஸ்.எஸ். தென்னரசு, கோரிக்கைக்கைக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், "கஜா புயலின் தாக்கத்தால் வேதாரண்யத்தில் வணிக நிறுவனங்கள், கடைகள் பெரும் பாதிப்புக்குள்ளாகிவிட்டன. இதனால் வர்த்தகமும், வர்த்தகர்களுக்கும் பெரும் பாதிப்பும் இழப்பும், ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வீடு, உடைமைகள், பொருள்களை இழந்து தவிக்கின்றனர். அனைத்துத் தரப்பினரின் வாழ்வாதாரமும் சீரழிந்துள்ள நிலையில் வர்த்தகம் படுமோசமாகிவிட்டது இந்த நிலமையில் தொழில் வரி, சொத்து வரி, உரிமங்களுக்கான வரி, குடிநீர் வரி போன்றவைகளை உடனடியாக செலுத்துமாறு நகராட்சி நிர்வாகம் கட்டாயப்படுத்துகிறது. புயலின் பாதிப்பைக் கருத்தில் கொண்டு, வரிவசூலை 6 மாதங்களுக்கு நிறுத்தி வைக்குமாறு நகராட்சி நிர்வாகத்தை அறிவுறுத்த வேண்டும்" என அதில் தெரிவித்து அனுப்பியுள்ளார்.