கடந்த சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க. தேர்தல் பணிக்காகவும் கட்சியின் நிர்வாக வசதிக்காகவும் தேனி மாவட்டத்தை தெற்கு, வடக்கு என இரண்டாக பிரித்தனர். இதில் தெற்கு மாவட்டத்தில் உள்ள கம்பம், ஆண்டிபட்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் மாவட்ட செயலாளராக கம்பம் ராமகிருஷ்ணனை நியமிக்கப்பட்டார். அதுபோல் வடக்கு மாவட்டத்தில் உள்ள போடி, பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிகளின் மாவட்ட செயலாளராக தங்கத்தமிழ்ச்செல்வன் நியமிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அ.ம.மு.க. உட்பட மாற்றுக் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்கத்தமிழ்ச் செல்வன் முன்னிலையில் திமுகவின் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர்களைச் சந்தித்த தங்கத்தமிழ்ச்செல்வன், “இந்த கரோனா காலத்தில் எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய தி.மு.க. ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு தமிழகம் முழுவதும் இயன்ற உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறோம். ஆனால் தமிழ் நாட்டில் அ.தி.மு.கவுக்கு இருக்கிற ஒரே பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.எஸ். மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார்.
இவர் வெற்றி பெற்று ஒரு வருடம் ஆகியும்கூட தொகுதி பக்கம் தலை காட்டவில்லை. இந்த கரோனா காலத்தில்கூட தேனி தொகுதிக்கு எந்த ஒரு உதவியும் செய்து தரவில்லை. ஆனால் மத்திய அரசின் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக தனி விமானம் மூலம் மொரிசியஸ் மற்றும் மாலத்தீவு நாட்டுக்கு அவர் பயணம் செய்து தற்போது பாரீசில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவரது இந்த பயணமானது அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் தேர்வில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமிருந்து துணை முதல்வர் ஓ.பி.எஸ். வாங்கிய பணத்தை பதுக்கி வைக்கதான் தனி விமானத்தில் ஓ.பி.ஆர். சென்றுள்ளார். அவர் மீது மத்திய, மாநில அரசு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெரும்பாலும் ஊழல் செய்த பணத்தை மாலத்தீவு, மொரீசியஸ் நாட்டில் உள்ள வங்கிகளில் பதுக்கிவைக்கத்தான் செல்வார்கள்.” என்று கூறினார். இந்த பேட்டியின்போது மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.