
பெண்கள் தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். ''தமிழக அரசின் மீதான நற்பெயர் மற்றும் ஆதரவு பலருக்கு வயிற்றெரிச்சலை தந்திருக்கிறது என நினைக்கிறேன். இந்த மாநிலம் எப்படி இருக்கிறது என பச்சை பொய்யைக் கூறி வருகிறார்கள். உண்மையான நிலைமை வேறு. எப்பொழுதுமே பெண்களுடைய வளர்ச்சி அதிகமானால் இவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் எல்லாருமே சேர்ந்து அதிமுக, பாஜக என எல்லா எதிர்க்கட்சிகளுமே சேர்ந்து நாடகம் போட்டார்கள். ஆனால் எந்த நாடகத்திலும் அவர்கள் வெற்றியடையவில்லை. இன்றைக்கு பெண்கள் பாதுகாப்பு என்பதை கையில் எடுத்து தொடர்ச்சியாக பச்சைப் பொய்யைக் கூறி வருகிறார்கள்.
அதுவும் திராவிட மாடல் அரசு பெண்களை ஏமாற்றிவிட்டது போல் சொல்கிறார்கள்.உண்மை அப்படியல்ல.அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். முதன்முதலில் பெண்களுக்கு சொத்துரிமை, வேலைவாய்ப்பு, காவல் துறையில் பெண்கள், சுயஉதவிக் குழுக்கள் என வீட்டில் முடங்கிக் கிடந்த பெண்களை வெளியே வரவைத்ததும், திருமண திட்டங்கள் மூலம் பெண்களை 12ஆம் வகுப்பு வரை படிக்க வைத்தது என எல்லாமே திமுக அரசுதான்'' என்றார்.
இன்று காலை மகளிர் தின வாழ்த்து தெரிவித்திருந்த தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய், 'பெண்களை பாதுகாக்க தவறிய திமுக அரசை வெளியேற்றுவோம்' என வீடியோ வெளியிட்டிருந்த நிலையில் அமைச்சர் கீதா ஜீவன் இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.