திருச்சி மாவட்டத்தில் திமுக மா.செ.வாக கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இருந்தவர் கே.என்.நேரு. திடீர் என கட்சி வசதிக்கு என்று மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தெற்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இதன் பிறகு சிலகாலம் கழித்து திருச்சியை 3 மாவட்டமாகப் பிரித்து வடக்கு மாவட்டச் செயலாளராக காடுவெட்டி தியாகராஜன், மத்திய மாவட்ட செயலாளராக வைரமணி, தெற்கு மாவட்டச் செயலாளராக எம்.எல்.ஏ. அன்பில்மகேஷ் ஆகியோரை நியமித்தனர்.
கே.என்.நேருவுக்கு கட்சியின் முதன்மைச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. இதனால் அடிக்கடி சென்னை செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் மாவட்டச் செயலாளர்கள் வைரமணி, காடுவெட்டி தியாகராஜன் ஆகியோர் நேருவின் ஆதரவாளர் என்பதால் கே.என். நேருவின் மகன் அருண்நேரு கட்சிகாரர்களின் திருமண நிகழ்ச்சியில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
ஆனால் தெற்கு மாவட்டத்தில் அன்பில் மகேஷ் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் கலந்து கொள்வது இல்லை என்கிற பரவலான குற்றச்சாட்டு இருந்தது.
திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட கே.கே.நகர் பகுதிக்குட்பட்ட 37- ஆவது வட்டச் செயலாளர் சீனு.தியாகராஜன், மலைக்கோட்டை பகுதிக்குட்பட்ட 9- ஆவது வட்டச் செயலாளர் ஜி.பாலமுருகன், 14- ஆவது வட்டச் செயலாளர் எம்.முத்துவேல் ஆகியோர் சரிவர கட்சிப் பணியாற்றாததால் மூவரும் அப்பதவியிலிருந்து நீக்கப்படுவதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் (ஜூன் 1) அறிவித்தார்.
இவர்களுக்கு பதிலாக 37-ஆவது வட்டத்துக்கு ஏ.பன்னீர்செல்வம், 9-ஆவது வட்டத்துக்கு ஜே.சிவக்குமார், 14-ஆவது வட்டத்துக்கு ஒய்.சிலம்பரசன் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் திருச்சி தி.மு.க. மாநகரச் செயலாளர் அன்பழன் தலைமையில் கலைஞர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் குறித்த வட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு அன்பில் மகேஷ் தனக்கு கீழ் உள்ள வட்டச் செயலாளர்கள் யாரும் கலந்து கொள்ள கூடாது என்று சொல்லி இருந்த நிலையில் மீறி கலந்து கொண்டவர்களை நீக்கி உள்ளார்கள் என்கிறார்கள்.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி மாவட்ட அரசியலுக்கு வந்த பிறகு இதற்கு முன்பு திருவரம்பூர் ஒன்றியச் செயலாளர் நவல்பட்டு விஜி என்பவர் அதிரடியாக நீக்கப்பட்டு குண்டூர் மாரியப்பன் ஒன்றியச் செயலாளராக நியமிக்கப்பட்டார் என்பதும் திருச்சி தி.மு.க.வில் கடந்த 30 வருடங்களாக வட்டச் செயலாளர்கள் நீக்கப்பட்டதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. .