இந்தியாவில் ஆண்டுக்கு 5 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தரப்படும் என மத்தியில் ஆளும் பாஜக அரசாங்கம் அறிவித்தது. ஆனால், நேர் எதிராக வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. நாட்டில் உருவாகியுள்ள பொருளாதார, வரி சிக்கலால் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. இதனால் வேலைவாய்ப்பை இழந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் அடுத்து என்ன செய்வது எனத்தெரியாமல் தவிக்கின்றனர்.
இந்நிலையில் புதிய வேலை வாய்ப்புகளும் இல்லாததால் படித்த இளைஞர்கள், வேலையில்லாமல் அல்லல்படுகின்றனர். எல்.ஐ.சி, பி.எஸ்.என்.எல், ஏர் இந்தியா போன்ற பொதுத்துறை நிறுவனங்களை மோடி அரசு விற்பதால் அரசுப்பணியில் உள்ளவர்களும் அதிர்ந்துப்போயுள்ளார்கள்.
பொதுத்துறை நிறுவனங்களை அரசாங்கம் விற்பதை கண்டித்தும், காலியாக உள்ள பணியிடங்களை அரசுகள் நிரப்ப வேண்டும், அரசு மற்றும் தனியார் துறையில் குறைந்தபட்ச ஊதியமாக 21 ஆயிரம் வழங்க வேண்டும், அரசுப்பணிகளை ஒழிக்கும் அரசாணையை வாபஸ் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், கப்பற்படை தினமான பிப்ரவரி 18ந்தேதி பேரணி நடத்தினர்.
திருவண்ணாமலை நகரில் அண்ணா நுழைவாயிலில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணி என முடிவு செய்திருந்தனர். இதற்காக காவல்துறையிடம் அனுமதி கேட்டபோது, காவல்துறை முதலில் அனுமதி தந்து, பின்னர் மறுத்தனர். ஆனால் தடையை மீறி பேரணி நடத்துவோம் என வாலிபர் சங்கம் அறிவித்தது.
இறுதியில் 500 மீட்டர் தூரத்துக்கு பேரணி செல்ல காவல்துறை அனுமதி தந்தது. பேரணி முடியும் இடத்தில் கோரிக்கையை வலியுறுத்தி பேசிக்கொள்ளலாம், இதனை மீறினால் கைது என எச்சரித்தனர். அதனை தொடர்ந்து 500 மீட்டர் தூரம் பேரணி சென்றனர்.
பின்னர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில துணை செயலாளர் நந்தன் பேசினார். செய்தியாளர்களிடம் பேசிய நந்தன், "டி.என்.பி.எஸ்.சியில் முறைகள் பல நடந்துள்ளன, அதனை நேர்மையான அதிகாரிகளை கொண்டு விசாரணை நடத்தி தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனைகளை பெற்று தரவேண்டும். அதேபோல், காலியாகவுள்ள அரசுப்பணியிடங்களில் ஓய்வு பெற்றவர்களை நியமிப்பதை நிறுத்திவிட்டு படித்துவிட்டு வேலையில்லாமல் உள்ள இளைய சமுதாயத்துக்கு வழங்க வேண்டும்" எனக்கோரிக்கை விடுத்தனர்.