கடந்த ஒரு மாதமாகவே அ.தி.மு.க.வில் அடுத்தடுத்த அதிரடிகள் நடைபெற்று வருகின்றது. முதல்வர் வேட்பாளர் தொடர்பாக அமைச்சர்கள் தொடர்ந்து மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வந்தனர். இதனையடுத்து அ.தி.மு.க.வில் இதுதொடர்பாக யாரும் கருத்துத் தெரிவிக்கக் கூடாது என்று ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் கூட்டறிக்கை வெளியிட்டனர். இதனையடுத்த சில நாட்களாக அமைதியாக இருந்த இந்தப் பிரச்சனை கடந்த வாரம் நடைபெற்ற அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டத்தில் பூதாகரமாக வெடித்தது.
பழனிசாமி மற்றும் ஓ.பி.எஸ் இருவரும் காரசாரமாகப் பேசியதாக தகவல்கள் வெளியாகியது. இதனையடுத்து இதுதொடர்பான விவரங்களைப் பேசி தீர்ப்பதற்காக நேற்று செயற்குழுக் கூட்டம் அ.தி.மு.க தலைமையகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முக்கியமாக வரும் 7ஆம் தேதி முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி தெரிவித்தார். இந்நிலையில், தற்போது முதல்வர் பழனிசாமியை அவரது வீட்டில் அமைச்சர் வேலுமணி இன்று மாலை சந்தித்துப் பேசினார். அதற்கு பிறகு நந்தம் விஸ்வநாதன் அவருடன் சந்தித்துப் பேசினார். அதைத்தொடர்ந்து அமைச்சர் உதயகுமார், துணை முதல்வர் ஓ.பி.எஸ் வீட்டில் அவரை சந்தித்துப் பேசினார். இந்நிலையில், ஓ.பி.எஸ் உடனான சந்திப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது அவர் முதல்வருடன் ஆலோசனை செய்து வருகிறார்.