காதலர்கள் மற்றும் முறையற்ற தொடர்பில் இருப்பவர்கள் தனியாக பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவர்களை மிரட்டி பணம், நகை மற்றும் செல்போனை பறித்து வந்த கும்பலை திண்டுக்கல் போலீசார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் முருக வாகனம் பகுதியைச் சேர்ந்த ராகுல் என்பவர் கடந்த 26 ஆம் தேதி பைக்கில் வந்த சில நபர்கள் தன்னிடம் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்டதாகக் காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து தாடிக்கொம்பு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை அடிப்படையில் செந்தூரப்பாண்டியன், பிரேம்குமார், ஷேக் பரீத், சிவசக்தி ஆகிய நான்கு பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
தொடர்ந்து நான்கு பேரையும் ரகசியமாக போலீசார் கண்காணித்து வந்த நிலையில் திண்டுக்கல் பழனி பைபாஸ் அருகே சுற்றி வளைத்து கைது செய்தனர். நான்கு பேரையும் விசாரித்ததில் பிடிபட்ட நபர்களில் செந்தூரப்பாண்டியன், பிரேம்குமார் ஆகிய இருவரும் காதலர்கள் மற்றும் முறையற்ற தொடர்பில் இருக்கும் ஜோடிகள் தனிமையில் ஒதுங்குவதை நோட்டமிட்டு ஷேக் பரீத், சிவசக்தி ஆகியோருக்கு தகவல் கொடுப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்துள்ளனர்.
பின்னர் அங்கு சென்று தனிமையில் உள்ள காதலர்களை அடித்து மிரட்டி அவர்களிடமிருந்து பணம், நகை, செல்போன் ஆகியவற்றை பறிப்பதை வாடிக்கையாக செய்து வந்தது தெரியவந்தது. பல ஆண்டுகள் இவ்வாறு வழிப்பறியில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது நான்கு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமிருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 16 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.