ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த ஒன்றியத்திற்குட்பட்ட 96 சத்துணவு மையங்களில் காய்கறி தோட்டம் அமைப்பதற்காக முதல் கட்டமாக 41 சத்துணவு மையங்களுக்கு உபகரணங்களை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
"பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற நிலையை முதல் அமைச்சர்தான் உருவாக்கி உள்ளார். மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு மற்றும் வருகை பதிவு ஆகியவற்றை கொண்டு மதிப்பெண் கணக்கிடப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதுவரை அரசு பள்ளிகள் முழுமையாகவும், தனியார் பள்ளிகள் 75 சதவீதமும் இது தொடர்பான விவரங்களை கல்வித் துறைக்கு கொடுத்துள்ளார்கள்.
மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண்களில் குளறுபடி ஏற்பட்டால், அந்த மாணவன், வகுப்பில் நடத்தப்படும் தேர்வுகளில் எத்தனை மதிப்பெண்கள் பெற்றார், 9ம் வகுப்பில் எப்படி மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும். தனியார் பள்ளிக்கும் அரசு பள்ளிக்கும் உள்ள வேறுபாடுகளை சுட்டிக்காட்டி, துறை அலுவலர்கள் தங்கள் கருத்துகளை வெளியிட முடியாது. நடத்தை விதிமுறைகளை மீறி செயல்படக்கூடாது என்று முதன்மை கல்வி அதிகாரி மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சில பள்ளிகளில் ஆன் லைன் மூலம் தேர்வு நடத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு வந்துள்ளது. அது போன்ற குற்றச்சாட்டுகள் வந்தால் அதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும். கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. அந்த மாணவர்கள் ரேங்கார்ட்டில் கையெழுத்து போடுவதற்காகதான் வந்துள்ளனர்.
34,872 மாணவர்கள் 24ந்தேதி அன்று தேர்வு எழுத வரவில்லை. இவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்று அறிக்கப்பட்டது. இது குறித்து ஆய்வு செய்தபோது, இதில் 3 பாடங்களை எழுதாதவர்கள் அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது. மீண்டும் யார் தேர்வு எழுத விரும்புகிறார்கள் என்ற விவரம் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரிடம் கடிதம் மூலமாக பெறப்படுகிறது. அதுகுறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த முடிவின் விவரம் வந்த பின்னர் தேர்வு தொடர்பான முடிவு எடுக்கப்படும். இரூபாக்ஸ் நிறுவனத்தின் மூலம் அரசு இலவசமாக நீட் பயிற்சியை அளித்து வருகிறது. அரசு பள்ளி மாணவர்கள், அரசின் சார்பில் விலையில்லாமல் வழங்கப்பட்டுள்ள லேப்-டாப் மூலம் நீட்தேர்வுக்கான பயிற்சியை பெற்றுக்கொள்ளலாம்.
1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஆன் லைன் மூலம் பாடங்களை நடத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் அறிக்கை கிடைத்த உடன் அது தொடர்பான முடிவை முதல் அமைச்சர் எடுப்பார். 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண்கள் குறித்து குழுவின் அறிக்கை பெற்ற பின்னர் முடிவு செய்யப்படும்" என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.