Skip to main content

நக்கீரன் எதிரொலி: சங்ககிரியை வளைத்துப்போட்ட கந்துவட்டி மாஃபியாக்கள் கைது! சிபிசிஐடி போலீஸ் அதிரடி!!

Published on 28/08/2019 | Edited on 28/08/2019

 


சேலம் மாவட்டம் சங்ககிரியில் கந்துவட்டிக்கு கடன் வாங்கிய அப்பாவி மக்களின் சொத்துகளை வளைத்துப்போட்ட பிரபல தொழில் அதிபர்கள் இருவரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

சண்முகம்

s


சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்தவர் சண்முகம். இவருடைய தம்பி மணி. ஸ்ரீபிஎஸ்ஜி கல்வி நிலையங்கள், சண்முகம் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ், ஸ்பின்னிங் மில் என சங்ககிரியில் பெரும் தொழில் சாம்ராஜ்யங்களுக்குச் சொந்தக்காரர்கள். பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியான இவர்களுக்கு, சங்ககிரியில் ஒட்டுமொத்த மக்களும் எதிராக திரும்பியுள்ளனர். காரணம், கந்துவட்டியும் அதைக்காரணம் கட்டி சொத்துகளை அடித்துப் பிடுங்குவதும்தான்.


சங்ககிரி பகுதியில், சண்முகம் சகோதரர்களை 'மூவாயிரத்து ஏழு' குடும்பம் என்கிறார்கள். அதன்பின்னணி குறித்து விசாரித்தோம். சண்முகம் பிரதர்ஸின் தந்தை பழனிசாமி கவுண்டர் ஒரு வேன் வைத்திருந்தார். அந்த வண்டியின் பதிவெண்தான் 3007. அந்த வாகனத்தை ராசியான வாகனமாக கருதியதால், அதன்பிறகு அவர்கள் வாங்கிய அனைத்து வாகனங்களின் பதிவெண்களையும் 3007 ஆக முடியும்படி பதிவு செய்திருக்கிறார்கள். 

மணி

ம்


கடந்த 7.2.2019ம் தேதியன்று, சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சண்முகமும் அவருடைய தம்பி மணியும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மைத்துனர் வெங்கடேஷூம், சங்ககிரி டிஎஸ்பி அசோக்குமாரும் தங்களை மிரட்டுவதாக கூறினர். ஆனால், இதை ஊடகங்களில் பார்த்த உள்ளூர் மக்களோ, அவர்கள் முதலைக்கண்ணீர் வடிப்பதாகவும், அவர்களால்தான் இந்த ஊரே பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் 'நக்கீரன்' பத்திரிகையிடம் கூற, நாமும் உடனடியாக களத்தில் இறங்கினோம்.


சண்முகம் பிரதர்ஸால் பாதிக்கப்பட்ட சிலரை நாம் நேரில் சந்தித்து பேசினோம். 15 லட்சம் ரூபாய் கடனுக்கு கந்து வட்டி, மீட்டர் வட்டி எல்லாம் போட்டு 50 லட்சம் ரூபாய் வரை வசூலித்து இருப்பதும், அப்போதும் ஆசை அடங்காத சண்முகம் பிரதர்ஸ் அடமானமாக வைத்த 6 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, கடன் வாங்கியவர்களுக்கு தெரியாமலேயே கிரயம் செய்திருப்பதும் தெரிய வந்தது.


நிலத்தை இழந்தவர் கெஞ்சியதால், 'வேண்டுமானால் 5 லட்சம் தருகிறோம். வாங்கிக்கொண்டு ஓடிப்போய்விடுங்கள்' என்றும் மிரட்டி அனுப்பி இருக்கிறார்கள், இந்த கந்துவட்டி மாஃபியாக்கள். ராமசாமி என்பவர், சொந்தத் தொழில் தொடங்குவதற்காக கந்துவட்டி மாஃபியாக்களிடம் 25 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். அதற்கு  வட்டி மட்டுமே 75 லட்சம் ரூபாய் செலுத்திய நிலையில், இன்னும் 1.10 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர். கடன் பாக்கிக்காக அவர்கள் வசி க்கும் வீட்டையும் காலி பண்ணச்சொல்லி மிரட்டியிருக்கிறார்கள்.


கந்துவட்டி மாஃபியாக்களின் சுரண்டலால் மனம் உடைந்து 8 பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறுகின்றார்கள் சொந்த ஊர் மக்கள். இதுபற்றி எல்லாம், கடந்த 2019 பிப்ரவரி 20-22ல் வெளியான 'நக்கீரன்' இதழில், 'முதல்வர் மாவட்டத்தில் கந்துவட்டி மாஃபியா! குவியும் புகார்கள்!' என்ற தலைப்பில் விரிவாக எழுதியிருந்தோம். 3007 சண்முகம் பிரதர்ஸால் பாதிக்கப்பட்ட 14 பேர், தங்களுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் சொத்துகளை சட்ட விரோதமாக கிரயம் செய்து கொண்டதாக சேலம் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர். 


நக்கீரனில் செய்தி வெளியான பிறகுதான், சண்முகம் பிரதர்ஸின் அட்ராசிட்டிகள் குறித்து வெளியுலகுக்கு தெரிய வந்தது. அதன்பிறகுதான், இந்த வழக்கு சிபிசிஐடி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. டிஎஸ்பி கிருஷ்ணன் தீவிர விசாரணை நடத்தி வந்தார்.


இதற்கிடையே, சங்ககிரி அக்கமாபேட்டையைச் சேர்ந்த ராமசாமி என்பவர் அளித்த புகாரின்பேரில், சண்முகம், அவருடைய தம்பி மணி, சண்முகத்தின் மகன் கார்த்திகேயன், தங்கை பர்வதம் ஆகிய நான்கு பேர் மீதும் கந்துவட்டி தடைச்சட்டம் பிரிவு 4, இ.த.ச. பிரிவுகள் 420 (மோசடி), 467 (போலி ஆவணம் தயாரித்தல்), 468  (உள்நோக்குடன் போலி ஆவணம் தயாரித்தல்), 471 (ஏமாற்றுதல்) ஆகிய ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


இது ஒருபுறம் இருக்க, காவடிக்காரனூரைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் அளித்த ஒரு புகாரின்பேரில் சண்முகத்தையும், மணியையும் நேற்று (ஆகஸ்ட் 27, 2019) திடீரென்று கைது செய்திருக்கிறது சிபிசிஐடி காவல்துறை. தனித்தனி புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை தொடரும் எனத்தெரிகிறது. கைதான இருவரையும் சேலம் மாவட்ட ஜேஎம்-4 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்ட்ரேட் உத்தரவின்பேரில் அவர்கள் இருவரும் 15 நாள்கள், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.


காவல்துறை வட்டாரத்திலும் பெரிய அளவில் செல்வாக்கு உள்ளவர்களான சண்முகம் பிரதர்ஸ் சிக்கியது எப்படி?, விசாரணைக்கு அவர்கள் வழங்கிய ஒத்துழைப்பு குறித்தும் விசாரித்தோம்.

 

ச்


காவடிக்காரனூரைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர், சண்முகம் பிரதர்ஸிடம் கடந்த 1998ம் ஆண்டு டிப்பர் லாரிகள் வாங்கி தொழில் செய்வதற்காக 8 லட்சம் ரூபாயை 3 ரூபாய் கந்துவட்டிக்கு கடன் வாங்கியிருக்கிறார். இதற்கு அடமானமாக சண்முகம் பிரதர்ஸ், வெங்கடேசனுக்குச் சொந்தமான 23 ஏக்கர் விளைநிலத்தை 'பவர்' எழுதி வாங்கிக் கொண்டனர். வாங்கிய கடனில் 2.75 லட்சம் ரூபாய் மட்டுமே செலுத்திய அவர், 'அதற்குமேல் தன்னால் கடன் செலுத்த முடியாது. பாக்கித்தொகையை  விரைவில் செட்டில்மெண்ட் செய்து விடுகிறேன். நிலத்தைக் கொடுத்துவிடுங்கள்' என்று கேட்டுள்ளார். 


அப்போது அவரை ரொம்பவே அலட்சியப்படுத்திய சண்முகம் பிரதர்ஸ், உன் நிலத்தை 2001ம் ஆண்டிலேயே வேறு ஒருவருக்கு கிரயம் செய்து விட்டோம் என்று அதிர்ச்சி குண்டை வீசியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ந்து போன வெங்கடேசன், பாக்கித்தொகையாக 20 லட்சம் ரூபாய்கூட எடுத்துக் கொள்ளுங்கள். நிலத்தை கொடுத்து விடுங்கள் எனக் கெஞ்சியபோதும், அவரை மிரட்டி விரட்டி அடித்துள்ளனர். 6 கோடி மதிப்புள்ள நிலத்தை வெறும் 8 லட்சம் ரூபாய் கடனுக்காக அபகரித்துக் கொண்டார்களே என புலம்பிய வெங்கடேசன், அதன்பிறகுதான் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார்.


அவர் கொடுத்த புகாரில்தான் தற்போது கந்துவட்டி மாஃபியாக்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். திருட்டு, மோசடி உள்ளிட்ட குற்ற வழக்குகளை மிக நுட்பமாக விசாரிப்பதில் வல்லவரான டிஎஸ்பி கிருஷ்ணன், நிலத்தை வளைத்துப்போட்டது குறித்து கேட்டபோது, ஒழுங்காக பதில் சொல்லாமல் போக்குக் காட்டியிருக்கிறார்கள். பல கேள்விகளுக்கு மவுனமாகவே இருந்துள்ளார் சண்முகம். 


மணி மட்டும், நாங்கள் சட்ட விரோதமாக எந்த நிலத்தையும் கிரயம் செய்யவில்லை என்று கிளிப்பிள்ளைபோல் ஒரே பதிலையே சொல்லிக்கொண்டு இருந்தார் என்கிறது சிபிசிஐடி வட்டாரங்கள். ஏற்கனவே சங்ககிரி காவல்நிலையத்தில் அவர்கள் மீது புகார்கள் வந்தபோது உஷாராக தலைமறைவான சண்முகம் பிரதர்ஸ், முன்ஜாமினும் பெற்றார்கள். இந்தமுறை அப்படி அலட்சியமாக விட்டுவிடக்கூடாது என்பதில் சிபிசிஐடி ஆரம்பத்தில் இருந்தே மிகக்கவனமாக காய் நகர்த்தியுள்ளது. 


சொல்லப்போனால் சண்முகமும், மணியும் சங்ககிரியைவிட்டு எங்கேயும் நகர்ந்துவிடாதபடி கண்காணிப்பு வளையத்திலேயே வைத்திருந்துள்ளனர். சிபிசிஐடி ஐஜி சங்கரிடம் இருந்து அவர்களை கைது செய்ய சிக்னல் கிடைத்த சில நிமிடங்களில், மப்டி உடையில் சென்ற சிபிசிஐடி காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது  செய்துள்ளனர்.

 

அப்போது வீட்டில் இருவரும் முண்டா பனியனுடன் கேஷூவல் உடையில் இருந்துள்ளனர். மப்டியில் இருந்த காவலர்கள் சரசரவென வீட்டுக்குள்  நுழைவதைப் பார்த்ததும், யார் நீங்கள் என்று பதற்றத்துடன் கேட்டுள்ளனர். தாங்கள் சிபிசிஐடி போலீஸ் என்று கூறியவர்கள், 'ஏறுடா வண்டியில்' என்றனராம். அதற்கு  அவர்கள், நாங்கள் இந்த சொஸைட்டியில் கவுரவமானவர்கள் என்று மணி சொல்லி இருக்கின்றனர். அதற்கு, 'டேய் அப்பாவிகளின் சொத்தைப் பிடுங்கித் தின்னுருக்க.  உனக்கு என்னடா மரியாதை,' என காவல்துறையினரும் பதிலுக்கு பஞ்ச் வசனம் பேசியிருக்கிறார்கள். 


நம்மிடம் பேசிய சிபிசிஐடி காவல்துறை அதிகாரி ஒருவர், 'சண்முகம் பிரதர்ஸ் வெள்ளாளக் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களும் சொந்த சாதியில் உள்ள அப்பாவி மக்களாக தேடிப்பிடித்து கடன் கொடுத்துள்ளனர். அவர்களுக்கே தெரியாமல் மோசடியாக நிலத்தை பினாமிகள் பெயர்களில் கிரயம் செய்துள்ளனர். அவர்கள் செய்த குற்றம், அப்பாவி ஜனங்களை உயிரோடு கொல்றதுக்கு சமமானது. எப்படியும் ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து சேர்த்திருப்பார்கள். சண்முகம் பிரதர்ஸால் பாதி க்கப்பட்டவர்கள் உள்ளூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கலாம்,'' என்றார்.


கந்துவட்டி மாஃபியாக்கள் ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யும்பட்சத்தில், அவர்களுக்கு ஜாமின் வழங்கக்கூடாது என்று ஆட்சேபம் தெரிவிக்கவும் சிபிசிஐடி முடிவு செய்திருக்கிறது.
 

சார்ந்த செய்திகள்