இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த பி.ஏ.ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அ.தி.மு.க.வின் முன்னாள் உறுப்பினரான இவர், ஜெ.ஜெ. என்ற பெயரில் கட்சி நடத்தி வருகிறார்.
அ.தி.மு.க.வில் உட்கட்சிப் பூசல் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், வரும் ஜூலை 11- ஆம் தேதி அன்று கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது. சின்னத்தைக் கைப்பற்றுவதற்கும், கட்சித் தலைமையைக் கைப்பற்றுவதற்கும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ரூபாய் 6,000 கோடி செலவிடப்படவுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே கட்சியில் யார் தலைமை வகிப்பது என்ற விவாதங்கள், காரசாரமான பேட்டிகளும் சென்று கொண்டிருக்கும் நிலையில், கட்சியில் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்ற வகையில், இரட்டை இல்லை சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும் என்று கடந்த ஜூன் 28- ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது.
மனு அளித்து ஒரு வாரம் காலம் ஆகியுள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் பி.ஏ.ஜோசப் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரித்த நீதிபதிகள், பொதுநல வழக்கு என்ற பெயரில் விளம்பர நோக்கத்துடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்ட ஒருவாரத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் கட்சி நடவடிக்கைகள் இவரை எந்தவித விதத்திலும் பாதிக்காது என்பதால், வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும், மனுதாரருக்கு ரூபாய் 25,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.