Skip to main content

ஒரே இரவில் போலீஸ்காரர் உள்பட 5 பேரிடம் வழிப்பறி; ஹைவே கொள்ளையர்கள் அட்டகாசம்! 

Published on 07/10/2018 | Edited on 08/10/2018

 

ராஅ


சேலத்தில் நேற்று இரவு ஒரே வழித்தடத்தில் ஆயுதப்படை போலீஸ்காரர் உள்பட ஐந்து பேரிடம் கத்தி முனையில் மோட்டார் சைக்கிள், செல்போன் ஆகியவற்றை கொள்ளை அடித்துச்சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


சேலம் சூரமங்கலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட திருவாக்கவுண்டனூர், குரங்குசாவடி, டால்மியா போர்டு, ஓமலூர் மெயின் ரோடு ஆகிய பைபாஸ் சாலைகள்¢ வழியாக இரவு நேரங்களில் அதிகளவில் பெங்களூருக்கு வாகனங்கள் செல்கின்றன. 


நேற்று இரவு ஒரு மணியளவில், கேரளாவைச் சேர்ந்த ஜான் (27) என்பவர் தனது நண்பருடன் காரில் பெங்களூர் சென்றார். ஓமலூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது, சிறுநீர் கழிப்பதற்காக காரை ஜான் சாலையோரம் நிறுத்தினார். அந்த வழியாக மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் கொண்ட கும்பல், ஜானை வழிமறித்து கத்தியைக்காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த 3 செல்போன், வாட்ச், 2 காசோலைகளை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.


அந்தநேரத்தில், ஓமலூரில் வசிக்கும் நீதிபதி ஒருவரின் வீட்டு பாதுகாப்புப் பணிக்காக சேலம் மாநகர ஆயுதப்படை போலீஸ்காரர் செல்லக்கண்ணு என்பவர் வந்து கொண்டிருந்தார். அவரையும் வழிமறித்த அந்த கும்பல் கத்திமுனையில், அவருடைய மோட்டார் சைக்கிளை பறித்துக்கொண்டு தப்பினர். 


இதுகுறித்து போலீஸ்காரர் செல்லக்கண்ணு உடனடியாக சேலம் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், சூரமங்கலம் போலீசாருக்கும் தகவல் அளித்தார். இது ஒருபுறம் இருக்க, அந்த கொள்ளை கும்பல் செல்லும் வழியில், ஒரு வாலிபரிடம் கத்தி முனையில் மோட்டார் சைக்கிள், லாரி பட்டறையில் வேலை செய்யும் தொழிலாளி, பஸ்சில் இருந்து இறங்கி வந்த பயணி ஒருவர் ஆகியோரையும் மிரட்டி அவர்களிடம் இருந்து நகை, பணத்தை கொள்ளை அடித்துள்ளனர்.


இந்த கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, போலீஸ்காரரிடம் பறிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் மட்டும் ஓமலூர் பைபாஸ் சாலையோரம் புதரில் இருந்து இன்று மீட்கப்பட்டது. 


ஒரே இரவில் போலீஸ்காரர் உள்பட 5 பேரிடம் கத்தி முனையில் நகை, பணம், மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் கொள்ளை அடித்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இதுகுறித்த விசாரணையில் இறங்கிய போலீசாருக்கு பல பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ள

வழிப்பறி கும்பல் சம்பவத்தின்போது கஞ்சா போதையில் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. போலீஸ்காரர் செல்லக்கண்ணுவிடம் மோட்டார் சைக்கிளைப் பறித்துக் கொண்டு தப்பியோடிய அந்த கும்பல் குறித்கு அவர், பைபாசில் இருந்த மாநகர நெடுஞ்சாலை ரோந்து போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.


அப்போது போலீசார் உடனடியாக துரிதமாக செயலில் இறங்கியிருந்தால் அந்த கும்பலை விரட்டி பிடித்திருக்க முடியும் என்கிறார்கள். ஆனால் ரோந்து போலீசாரோ, செல்லக்கண்ணுவை ஒரு குற்றவாளிபோல் அவரிடமே துருவி துருவி விசாரிப்பதிலேயே நேரத்தைக் கடத்தியுள்ளனர். ரோந்து போலீசாரின் மெத்தனப்போக்கால் கொள்ளை கும்பல் தப்பிச்சென்றிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை:  இதற்கிடையே, நேற்று இரவு ரோந்துப் பணியில் இருந்த அனைத்துப் போலீசாரையும் நேரில் வருமாறு, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவிட்டார். இதையடுத்து, வடக்கு சரக குற்றப்பிரிவு உதவி கமிஷனர் மோகன், சூரமங்கலம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் இதர காவல்நிலைய இன்ஸ்பெக்டர்கள் குமார், செந்தில், கண்ணன், எஸ்ஐ அங்கப்பன் மற்றும் 15 ஏட்டுகள் போலீஸ் கமிஷனரை சந்தித்தனர். அவர்களிடம் துணை கமிஷனர் தங்கதுரை விசாரணை நடத்தினார். 


ரோந்துப் பணியில் அலட்சியமாக இருந்ததோடு, தகவல் கிடைத்தவுடன் அதன்மீது நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்ததாக அனைவரையும் கடுமையாக எச்சரித்து அனுப்பினார். இதனால் மாநகர போலீசாரும் கலக்கம் அடைந்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்