ஈரோடு மாவட்டம் கொடுமுடி ரயில் நிலையத்தில் 2 -வது நடைமேடையில் கடந்த 10-ம் தேதி காலை 50 வயது மதிக்கத்தக்க ஆண் கழுத்தில் ரத்த காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த நபரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகப் பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து கிடந்தவர் யார் ? எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து ரெயில்வே போலீசார் சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து ரெயில்வே போலீசார் கூறியதாவது: இறந்து கிடந்த நபரின் கழுத்தில் கூர்மையான ஆயுதத்தால் ஒரு குத்து விழுந்து உள்ளது. அளவுக்கு அதிகமாக ரத்தம் வெளியேறியதால் அந்த நபர் இருந்துள்ளார்.
பிரேத பரிசோதனையிலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. 9 -ம் தேதி நள்ளிரவுக்குப் பின் அந்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம். எனவே அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆராய்ந்து வருகிறோம். மேலும் இறந்த நபரின் அடையாளங்களைக் காணும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.