அதிமுக முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன் தன்னை தாக்கியதாக நாகை அரசு மருத்துவமனையில் ஒருவர் அனுமதியாகியிருப்பது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
நாகை மாவட்டம், தலைஞாயிறு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தலைஞாயிறு பேரூராட்சியில் உள்ள ஓ.எஸ்.மணியனின் சொந்த வார்டான 13வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட அஜய்ராஜாவிற்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றியுள்ளர். அஜய்ராஜாவும் வெற்றி பெற்றுவிட்டார். ஓ.எஸ்.மணியன் மற்றும் அதிமுக குறித்து சமூக வலைதளங்களிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
இந்தநிலையில் ஜெகன் இன்று தலைஞாயிறு பகுதியில் நின்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியனுக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டு, கை கலப்பாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஜெகன் தலைஞாயிறு காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு. 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகப்பட்டினம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தலைஞாயிறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாளை பேரூர், நகர மன்றம், மாநகர் மேயருக்கான மறைமுக தேர்தல் நடக்க இருக்கும் சூழலில் தலைஞாயிறு பகுதியில் திமுக மற்றும் அதிமுகவினர் ஏராளமானோர் திரண்டிருக்கின்றனர். இதனால் அங்கு பரப்பான சூழல் நிலவி வருகிறது.