தஞ்சாவூரை தலைமை இடமாக கொண்டு ஒரு ஆம்னி பேருந்து நிறுவனம் கடந்த 2001 முதல் செயல்பட்டு வருகிறது. ஆயினும் கடந்த 2016ஆம் ஆண்டு தான் இந்நிறுவனம் பதிவு செய்யப்பட்டது. இந்நிறுவனத்தில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் தோறும் 2,200 ரூபாயும், மூன்றாவது வருட இறுதியில் முதலீடு செய்த ஒரு லட்ச ரூபாய் திருப்பி தரப்படும் எனவும் அறிவிப்பு வெளியிட்டது. இதனை நம்பி இந்நிறுவனத்தில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 10,000 மேற்பட்ட பொதுமக்கள் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ததாக தெரிகிறது.
2001 முதல் 2019ஆம் ஆண்டு வரை முதலீட்டாளர்களுக்கு முறையாக பணப் பட்டுவாடா செய்து வந்த நிறுவனம், கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனாவை காரணம் காட்டி முதலீட்டாளர்களுக்குப் பணப் பட்டுவாடாவை நிறுத்தியது. இந்த சூழலில் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் கமலூதீன் இறந்துவிட்டார். இதனைத் தொடர்ந்து கமாலுதீன் மனைவி மற்றும் மகன்கள் பொறுப்பிற்கு வந்தனர்.
ஆனால் 2019க்கு பிறகு உறுதி அளித்தவாறு முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பித் தரவில்லை எனக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் இது குறித்து திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, சென்னை ஆகிய காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். ஆயினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை காவல்துறை தலைவரை சந்தித்து புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. ஆனாலும் இந்த வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இதனையடுத்து பாதிக்கப்பட்ட சுமார் 500க்கும் மேற்பட்டோர் இன்று காலை திருச்சி மன்னார் புரத்தில் உள்ள பொருளாதார குற்றப் பிரிவு அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து கலைந்துபோக செய்தனர்.
இதுகுறித்து பேசிய முதலீட்டாளர்களில் ஒருவரான ஜபருல்லா கூறுகையில், “10,000க்கும் மேற்பட்டோர் ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளோம். நாங்கள் ஏமாற்றப்பட்டதை தாமதமாக உணர்ந்தோம். எங்களின் புகார் குறித்து போலீசார் சரிவர நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. தற்போது ராகத் உரிமையாளர்களாக உள்ள இறந்த கமாலுதீன் மனைவி, மகன் மற்றும் நிர்வாகிகள் 11 பேர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். அவர்களின் சொத்துகள் ஜப்தி செய்யப்பட வேண்டும். குற்றம் காட்டப்பட்டுள்ள அனைவர் மீதும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பதை எங்கள் கோரிக்கையாக உள்ளது” என்று தெரிவித்தார்.