தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. அப்போது ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கு காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டதன் காரணமாக கல் வீச்சு, கண்ணீர் புகை, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. அதில் போராட்டக்காரர்கள் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நானும் உங்களை போல் தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என கூறினார். இப்படி முதல்வரின் பொறுப்பற்ற பேட்டியை கண்டு தமிழக மக்கள் மேலும் கொதித்தெழுந்தனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. மேலும் பல இடங்களில் மறியல் போராட்டமும் நடந்தது. இதனிடையே ஒரு சில இடங்களில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியவர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் தான் தமிழகமே போராட்டகளமானது. சகாயம் ஐ.ஏ.எஸ்-ன் மக்கள் பாதை இயக்கம் சுட்டுக் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக இழுத்து மூடவேண்டும் என்று கோரிக்கை வைத்து சென்னை தலைமை அலுவலகத்தில் தொடர் உண்ணாவிரதம் தொடங்கினார்கள்.
சென்னையில் அவர்களது உண்ணாவிரதம் 4 வது நாளாக தொடரும் நிலையில், புதுக்கோட்டை மாவட்ட தலைமை அலுவலகத்தில் ராஜகோபாலபுரத்தில் திரண்ட மக்கள் பாதை இளைஞர்கள் தொடர் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளனர். உயிர் காக்க உரிமைக்காக போராடிய போராளிகளின் பறித்த உயிர்களுக்கு நீதி வேண்டும். தண்ணிய நிறுத்தியாச்சு, கரண்டை நிறுத்தியாச்சு என்று நொண்டி சாக்கு சொல்லாமல் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும். அதுவரை தங்களது போராட்டம் தொடரும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
மேலும் இது போன்ற அழிவு திட்டங்களை தமிழகத்திற்குள் நுழைய தடை விதிக்க வேண்டும். நெடுவாசல் திட்டம் ரத்து செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளையும் முன்னெடுத்து உண்ணாவிரத போராட்த்தை தொடங்கியுள்ளனர். அலுவலகத்தில் போராட்டம் என்பதால் போலீசார் சுற்றி சுற்றி வருகிறார்கள். இன்றுடன் போராட்டத்தை கலைக்கும் திட்டமும் போலீசாரிடம் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அடுத்தடுத்து போராட இளைஞர்கள் தயாராக உள்ளார்கள்.
Published on 26/05/2018 | Edited on 26/05/2018