ஈரோடு, ராசாம்பாளையம் ரோடு, எஸ்.எஸ்.பி நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியின் ஒரு வீட்டில் செல்லாயி (58) என்ற மூதாட்டி பல வருடங்களாக வீட்டில் வைத்து மது விற்பனையில் ஈடுபட்டு வந்தார். இவர் வீட்டுக்கு மது அருந்த வருபவர்களால் அப்பகுதி மக்கள் பல்வேறு அவதிக்கு உள்ளாகினர். மது குடிக்க வரும் குடிமகன்களால் அப்பகுதி பெண்கள், குழந்தைகள் வெளியே வர அச்சப்பட்டனர்.
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் ஏற்கனவே ஈரோடு கலெக்டர் அலுவலகம், எஸ்.பி. அலுவலகத்தில் மனு அளித்தனர். ஆனால் இந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு மது விற்பனையை தடுத்து நிறுத்தக் கோரி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வீரப்பன் சத்திரம் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
நிச்சயமாக மது விற்பனையில் ஈடுபடுபவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இன்ஸ்பெக்டர் சண்முகம் உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் உள்ள செல்லாயி வீட்டுக்கு சென்றனர். அங்கு செல்லாயிடம் விசாரணை நடத்தினர். வீட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 12 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லாயியை கைது செய்தனர். மேலும் இந்த மது விற்பனையில் தொடர்புடைய அவருடைய உறவினர்களையும் தேடி வருகின்றனர்.