பஞ்சாயத்தில் தன்னைவிட இளையவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க நேர்ந்ததால் முதியவர் ஒருவர் மனமுடைந்து காணப்பட்ட நிலையில் திடீரென மாரடைப்பால் அவர் உயிரிழந்த சம்பவம் திருவாரூரில் நிகழ்ந்துள்ளது.
65 வயதான முதியவர் அஞ்சுகண்ணுவுக்கும் நாகூர்மீரான் என்பவருக்கும் இடையே கோவில் திருவிழாவில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் நாகூர்மீரான் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பஞ்சாயத்து கூட்டப்பட்ட நிலையில் குற்றம்சாட்டப்பட்ட அஞ்சுண்ணுவுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை செலுத்த முடியாவிட்டால் நாகூர் மீரான் உள்ளிட்ட அவர்கள் தரப்பினரின் காலில் விழுந்து அஞ்சுண்ணு மன்னிப்பு கேட்கவேண்டும் என பஞ்சாயத்தில் தீர்ப்பு அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் சம்பந்தப்பட்டவர்களின் காலில் விழுந்து முதியவர் அஞ்சுண்ணு மன்னிப்பு கேட்டதாக கூறப்பட்ட நிலையில், மனஉளைச்சலில் காணப்பட்ட முதியவரை அன்று இரவே மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் காலில் விழ வைத்தவர்களை கைது செய்யக்கோரி அஞ்சுண்ணுவின் உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து நாகூர் மீரான், விக்னேஷ் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.