![old man robbed 9 pounds of jewelry and 66 thousand while claiming to be doing pooja](http://image.nakkheeran.in/cdn/farfuture/YtSiGk4-AectOCU5jYHbdTgH-1T-UcTvyLcKHBmSGAA/1715686710/sites/default/files/inline-images/Untitled-9_31.jpg)
ஈரோடு வி.வி.சி.ஆர் நகர் முதல் விதியைச் சேர்ந்தவர் சண்முகம்(72). இவரது மனைவி செல்வி (62). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி ஒருவர் கோவையிலும், மற்றொருவர் பள்ளிபாளையத்திலும் தனியாக வாசித்து வருகிறார்கள்.
இந்நிலையில் சண்முகம் மற்றும் செல்விக்கு அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் இருந்துள்ளது. இதுகுறித்து அவர்கள் அதே பகுதியில் உள்ள தெரிந்த பெண்ணிடம் கூறியுள்ளனர். அதற்கு அந்தப் பெண் கருங்கல்பாளையத்தில் தனக்கு தெரிந்த நபர் உள்ளார். அவர் உங்கள் உடல்நிலையை சரி செய்து விடுவார் என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சண்முகம், செல்வி கருங்கல்பாளையம் சென்று அந்த நபரை சந்தித்துள்ளனர். அப்போது அந்த நபர் பூஜை செய்தால் உங்களுக்கு சரியாகிவிடும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த நபர் நேற்று முன்தினம் செல்வி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அந்த நபர் ஊமத்தங்காய்யை உடைத்து அதன் விதையை பாலில் கலந்து செல்வி மற்றும் சண்முகத்துக்கு கொடுத்துள்ளார். அதைக் குடித்த இருவரும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து விட்டனர். அதன் பிறகு நேற்று இருவரும் எழுந்து உடல்நிலை சரியில்லை என்று பள்ளிபாளையத்தில் உள்ள மகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவரும் ஈரோட்டில் வீட்டுக்கு வந்து தாய், தந்தை இருவரையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளார்.
இந்நிலையில் அவரது மகள் வீட்டுக்கு வந்த போது பீரோ திறக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். செல்வி வீட்டுக்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 9 பவுன் நகைகள், மற்றும் ரூ.66 ஆயிரம் ரொக்கம் ஆகியவை மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார். இதுகுறித்து அவரது மகள், தாயிடம் கேட்டபோது அவர் நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளார். இதை அடுத்து செல்வி ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் செய்தார். இதை அடுத்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது அந்த நபர் கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த பெருமாள் (60) எனத் தெரிய வந்தது.
தற்போது வந்த நபர் சங்ககிரியில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்தடவுன் போலீசார் சங்ககிரி சென்று பெருமாளை கைது செய்து அழைத்து வந்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோட்டில் நூதன முறையில் நகை, பணத்தைத் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.