Skip to main content

ஆள்கடத்தல் வழக்கில் சிக்கிய ரவுடிகளுக்கு மாவுக்கட்டு! மீண்டும் திரும்புகிறதா பழைய டெக்னிக்?

Published on 11/03/2022 | Edited on 11/03/2022

 

Old Action Returned to Salem Police !!

 

தொடர் குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகளின் கொட்டத்தை ஒடுக்க, அவர்களுக்கு 'மாவுக்கட்டு' போட்டு முடக்கி வைக்கும் பழைய டெக்னிக்கை சேலம் மாநகரக் காவல்துறையினர் மீண்டும் கையிலெடுத்துள்ளனர். இதனால் ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்து ஆசாமிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

 

சேலத்தை அடுத்த கருப்பூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்தவர் அன்பழகன் (40). லாரி ஓட்டுநரான இவர், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். மார்ச் 6ம் தேதி, அவருடைய வீட்டிற்குள் ரவுடி சித்தேஸ்வரன் மற்றும் கூட்டாளிகள் நான்கு பேர் திடீரென்று நுழைந்தனர். அன்பழகனை கத்தி முனையில் மிரட்டியதோடு, சரமாரியாகத் தாக்கினர். வீட்டில் இருந்த 36 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு, அவரைக் காரில் கடத்திச்சென்றனர். 

 

கன்னங்குறிச்சி அருகே ஏற்காடு மலை அடிவாரத்திற்குக் கடத்திச்சென்று ஒரு மரத்தில் கட்டி வைத்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். மேலும், அவருடைய அக்காவிற்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்து, ஒரு லட்சம் ரூபாயை கொடுத்துவிட்டு தம்பியை மீட்டுக் கொள்ளுமாறும் மிரட்டியுள்ளனர். இதனால் அரண்டு போன அவர், உடனடியாக பணம் புரட்ட முடியாமல் தடுமாறியிருக்கிறார். வேறு வழியின்றி தன்னிடம் இருந்த 4 பவுன் நகைகள், 5 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அந்தக் கும்பலிடம் கொடுத்து விட்டு தம்பியை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது ரவுடி கும்பலின் தலைவன் சித்தேஸ்வரன், இதுகுறித்து காவல்துறையிடம் சொன்னால் இருவரையும் தீர்த்துக் கட்டிவிடுவேன் என்றும் எச்சரித்து அனுப்பி இருக்கிறார்.  

 

ரவுடி கும்பல் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த சித்தேஸ்வரன், கருப்பூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். உடலில் உள்ள காயங்களைப் பார்த்து சந்தேகம் அடைந்த மருத்துவமனை ஊழியர்கள், இதுகுறித்து கருப்பூர் காவல்நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். காவல்துறையினர் அன்பழகனிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தான் கடத்தப்பட்டதும், தன்னிடம் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் குறித்தும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, கருப்பூர் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சித்தேஸ்வரன் உள்ளிட்டோரை தேடி வந்தனர். 

 

Old Action Returned to Salem Police !!

 

இந்த நிலையில் ரவுடி சித்தேஸ்வரன்(39), அழகாபுரத்தைச் சேர்ந்த அப்பு என்கிற அரவிந்த்(31) ஆகிய இருவரையும் மடக்கிப் பிடித்தனர். சித்தேஸ்வரன் மீது ஏற்கனவே ஆள்கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இதுவரை நான்கு முறை குண்டாஸிலும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவரையும் சம்பவம் நடந்த வீட்டிற்கும், அன்பழகனை கட்டி வைத்து அடித்து உதைத்த இடத்திற்கும் நேரில் சென்று நிகழ்ந்த சம்பவங்களை நடித்துக் காட்டும்படி கூறி, வீடியோவில் பதிவு செய்தனர். அப்போது திடீரென்று காவல்துறையின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, இருவரும் தப்பி ஓட முயன்றனர். தப்பிச்செல்லும்போது அங்கிருந்த பள்ளத்தில் கீழே இடறி விழுந்ததில் இருவருக்கும் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. 


இதையடுத்து, இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, இருவருக்கும் மாவுக்கட்டு போடப்பட்டு உள்ளது.


முந்தைய அதிமுக ஆட்சியின்போது, அடிக்கடி குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகள், திருடர்களை கைது செய்யும் காவல்துறையினர் அவர்கள் மீண்டும் உடனடியாக குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்கும் நோக்கில் கை, கால்களை உடைத்துவிட்டு மாவுக்கட்டு போட்டுவிடும் நூதன டெக்னிக்கை கையாண்டனர். மனித உரிமை பிரச்னைகளில் இருந்து தற்காத்துக் கொள்ள, காவல்துறையினர் துரத்தியபோது அவர்கள் பள்ளத்தில் விழுந்தோ அல்லது காவல்நிலைய கழிவறையில் வழுக்கி விழுந்தோ கை, கால்களை உடைத்துக்கொண்டனர் என்று கூறி வந்தனர். 


சேலம் மாநகர காவல்துறையில் ஏற்கனவே சுனில்குமார்சிங், அமல்ராஜ், சங்கர் ஆகியோர் ஆணையர்களாக இருந்த காலகட்டங்களில் 'ஆக்டிவ்' ரவுடிகளுக்கு எதிராக இதுபோன்ற உத்தியைப் பின்பற்றினர். அவர்களின் கொட்டத்தை கொஞ்ச காலத்திற்கு முடக்கி வைக்கும் காவல்துறையின் இந்த உத்திக்கு மக்களிடத்திலும் ஆதரவு இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இத்தகைய டெக்னிக்கை காவல்துறையினர் கையாளாமல் இருந்த நிலையில், சேலம் மாநகரக் காவல்துறையினர் ரவுடிகளுக்கு மீண்டும் மாவுக்கட்டு போட்டு விடும் டெக்னிக்கை பின்பற்றத் தொடங்கியுள்ளனர். இது, ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்து ஆசாமிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்