ஒக்கி புயல்! குமரி மாவட்ட காங்கிரசாருக்கு
திருநாவுக்கரசர் வேண்டுகோள்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் அறிக்கை:
’’ஒக்கி புயல் பெருமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் துயர்துடைக்க மீட்பு நடவடிக்கைகளை விரைந்து எடுத்து போர்க்கால அடிப்படையில் நிவாரணங்கள் வழங்கிட உதவிப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசை தமிழக காங்கிரஸ் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். மத்திய அரசும் நிவாரணப் பணிகளுக்கு கணிசமான நிதியை ஒதுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன். நிவாரண முகாம்கள் மற்றும் மீட்புப் பணிக்குழுக்களை அதிகப்படுத்த தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும்.
சுமார் 50 மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களையும், அவர்களது படகுகளையும் திருப்பி கொண்டு வரவும், கடலில் தத்தளிக்கும் மீனவர்களை காப்பாற்றவும் ஹெலிகாப்டர், கப்பல் படை உள்பட அனைத்தையும் பயன்படுத்தி மீனவர்களை மீட்கவும், காப்பாற்றவும் அனைத்து நடவடிக்கைகளையும் அதிகப்படுத்த வேண்டும். சாலைகளில் வீழ்ந்து கிடக்கும் மரங்கள் அகற்றப்பட்டு போக்குவரத்தை சீர் செய்ய தேவையான நடவடிக்கைகளையும், துண்டிக்கப்பட்டுள்ள மின் இணைப்புகளை சீர் செய்யும் பணிகளையும் துரிதப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் கொண்டு சேர்க்கப்பட்டு அனைவருக்கும் போதுமான உணவு, உடை மற்றும் மருத்துவ வசதிகள் விரைந்து செயல்படுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களின் பல பகுதிகளிலும் இதேபோல பணிகள் வேகப்படுத்தப்பட வேண்டும். தேவையான நிதி, மீட்புக்குழு மற்றும் நிவாரண உதவிகளை மத்திய - மாநில அரசுகள் மக்களின் துயர்போக்க துரிதமாக செயல்படுத்தப்பட வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களும், நிர்வாகிகளும் ஏற்கனவே நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து காங்கிரஸ் தோழர்களும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்களுடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட விரைந்து செயல்படுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.’’