Skip to main content

எண்ணெய்க் கசிவு; வல்லுநர் குழு சென்னை வருகை

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
oil spill; Expert team visits Chennai

சென்னை எண்ணூர் கடல் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் சிபிசிஎல் நிறுவனத்திலிருந்து வெளியேறிய கச்சா எண்ணெய்க் கழிவுகள் படர்ந்தது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு படர்ந்திருக்கும் எண்ணெய்க் கழிவுகளை அகற்றவில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து தாமாக முன்வந்து தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் வழக்குப்பதிவு செய்து இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (14.12.2023) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விசாரணையின்போது தமிழக அரசு, சிபிசிஎல் நிறுவனம், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மீனவர்கள் தரப்பு என 4 தரப்பினரும் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர். மீனவர்கள் தரப்பில் வாதத்தை முன்வைக்கையில், “மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் அளிக்கப்படாமல் எண்ணெய் படலம் அகற்றப்பட்டு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது. சிபிசிஎல் நிறுவனம் தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் சுமார் 33 டேங்கர்களில் தலா 220 லிட்டர் என்ற வீதத்தில் 7600 லிட்டர் எண்ணெய்க் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

தொடர்ந்து எண்ணெய்க் கழிவுகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. எண்ணெய்க் கழிவுகள் அகற்றும் பணிக்காக 75 அதிநவீன படகுகள், 4 ஜேசிபிகள், 2 ஆயில் ஸ்கிம்மர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட தென் மண்டல பசுமை தீர்ப்பாயம், “மணலி தொழிற்சாலை சங்கங்கள் எண்ணெய்யை அகற்றும் பணியில் ஈடுபடாதது அதிருப்தி அளிக்கிறது. மீனவர்களே எண்ணெய்யை அகற்றும் பணியில் ஈடுபடும்போது, மணலி தொழிற்சாலை சங்கங்களும் பணியில் ஈடுபட வேண்டும். எண்ணெய்யை அகற்றும் பணியை டிசம்பர் 17 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.” என உத்தரவிட்டு இந்த வழக்கை 18 ஆம் தேதி ஒத்திவைத்துள்ளனர்.

இந்நிலையில், எண்ணூர் முகத்துவாரத்தில் ஏற்பட்டுள்ள எண்ணெய்க் கசிவு பாதிப்பை சென்னை ஐஐடி குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்தக் குழுவினர் எண்ணெய்க் கசிவு பாதிப்பு மற்றும் எண்ணெய்யின் அளவைக் கண்டறிந்து வருகின்றனர். 100 படகுகள் மற்றும் 400 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்த விரிவான அறிக்கையைத் தமிழ்நாடு அரசிடம் நாளை சமர்ப்பிக்க உள்ளனர். மேலும் எண்ணெய்க் கசிவை அகற்றுவது தொடர்பாக ஒடிசாவின் பாரதீப்பில் இருந்து சிறப்பு வல்லுநர் குழுவினர் நாளை சென்னை வருகின்றனர். இதுவரை 40 மெட்ரிக் டன் எண்ணெய், 36 ஆயிரத்து 800 லிட்டர் எண்ணெய் கலந்த தண்ணீர் அகற்றப்பட்டுள்ளது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்