சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
வருகின்ற 27ஆம் தேதி சசிகலாவின் தண்டனைக் காலம் முடிவுபெற்று, அவர் சிறையில் இருந்து வெளியேவர உள்ள நிலையில், அவர் அடிக்கடி இதுபோன்ற சில உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு வருகிறார்.
நேற்று (20.01.2021) மாலை அவருக்கு மூச்சுத் திணறலும் மிதமான காய்ச்சலும் இருந்ததால் சிறைவளாகத்தில் இருக்கும் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால், இரவு ஒரு மணி அளவில் மீண்டும் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருமல் அதிகமானதால், சிறை அதிகாரிகள் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்து, அங்கு சசிகாலா சிகிச்சை பெற்றுவருகிறார். இதனிடையே இன்று காலை மூச்சுத் திணறல் கட்டுக்குள் வந்தது.
இந்நிலையில், காலை உணவாக இரண்டு இட்லியும் ஒரு வேகவைத்த முட்டையும் வேண்டும் என்று சசிகலா கேட்டதைத் தொடர்ந்து, அதிகாரிகள் அவர் விரும்பிய உணவைக் கொடுத்துள்ளனர்.
இன்று காலை முதலே அவருடைய உறவினர்கள் பெங்களூரு அக்ரஹார சிறையில் அவரை நேரில் பார்க்க குவிந்துள்ளனர். அதேபோல் தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.