தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை கொள்முதல் செய்து பொது விநியோகம் செய்வதன் மூலம், நியாயவிலைக் கடைகளில் குறைந்த விலையில் பொதுமக்கள் வாங்குகின்றனர். உயரிய நோக்கத்துடன் தமிழக அரசு செயல்படுத்திவரும் இந்த ரேசன் திட்டத்தைச் சீர்குலைக்கும் விதமாக, விஷமிகள் கடத்தலுக்குப் பயன்படுத்துவது தொடர்ந்து நடக்கிறது. அதனால், ஒரு வழக்கு விசாரணையின்போது, தமிழக உணவு மற்றும் கூட்டுறவுத்துறை முதன்மைச் செயலாளரிடம் சில கேள்விகளை எழுப்பி விளக்கம் கேட்டது, சென்னை உயர்நீதிமன்றம்.
பொதுமக்களுக்கு அனுப்பப்படும் இலவச அரிசியில் முறைகேடு செய்ததாக எத்தனை அரசு ஊழியர்கள்/அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது? அப்படி பதிவு செய்து இருந்தால் யார் மீது பதிவு செய்யப்பட்டது?
ரேசன் அரிசி முறையாக விநியோகிக்கப்படுகிறதா அல்லது கையாடல் செய்யப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க ஏதேனும் நடைமுறைகள் உள்ளனவா?
இலவச அரிசி பெறுபவர்கள் முழுமையாகப் பயன்படுத்துகிறார்களா அல்லது அவர்களும் கையாடலுக்குத் துணைபோகிறார்களா? அப்படி துணைபோனால் அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
கடந்த பத்தாண்டுகளில் அரிசி கடத்திய புகாரில் குண்டர் சட்டத்தில் ஒரு முறைக்கு மேல் எத்தனை பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்?
உயர்நீதிமன்றம் இந்த அளவுக்குச் சாட்டையைச் சுழற்றியும், தமிழகத்தில் ரேசன் அரிசி கடத்தல் நின்றபாடில்லை. தற்போது, சாத்தூர் அருகே நடந்த கடத்தல் இது, "சாத்தூர் காவல்துறையினருக்கு ரேசன் அரிசி கடத்தல் குறித்து ரகசியத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, சாத்தூர்- கோவில்பட்டி நெடுஞ்சாலை- படந்தால் விலக்கு அருகில், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு லாரியை போலீசார் நிறுத்த முயற்சிக்க, அதன் டிரைவர் நிறுத்தாமல் வேகமாகச் சென்றுவிட, போலீசார் விரட்ட, பெத்துரெட்டிபட்டி விலக்கு அருகில் அந்த லாரியை நிறுத்திவிட்டு, டிரைவரும் க்ளீனரும் தப்பிவிட்டனர்.
அந்த லாரியில் சுமார் 20 டன் எடையுள்ள 400 மூட்டை ரேசன் அரிசி இருந்தது. லாரியையும் கடத்திவரப்பட்ட ரேசன் அரிசியையும் பறிமுதல் செய்த காவல்துறையினர், உணவு கடத்தல் தடுப்பு அலுவலருக்கு தகவல் தெரிவித்துவிட்டு ஒப்படைத்தனர். ரேசன் கடையிலிருந்து நேரடியாகவே அரிசி மூட்டைகளைக் கடத்தியது குறித்த விசாரணை நடந்துவருகிறது.