தருமபுரி மாவட்டம், சில்லாரஹள்ளி அருகே பூஞ்சோலை நகர் என்ற கிராமம் உள்ளது. 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் இந்த பூஞ்சோலை கிராமத்தில், பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் கூட கட்டமைக்கப்படவில்லை என்று ஊர் மக்கள் குமுறுகின்றனர். பூஞ்சோலை கிராமத்தில் இருந்து பாப்பிரெட்டிபட்டி, தருமபுரிக்கு செல்ல வேண்டும் என்றால் மெயின் ரோடு சாலைக்கு சென்று தான் பஸ் ஏற வேண்டும். ஆனால், பூஞ்சோலை கிராமத்தில் செல்லும் வழிப்பாதைகள் முழுவதும் சேறும் சகதியும் நிறைந்த மண்பாதைகளாகவே உள்ளது. பஸ் ஸ்டாண்டுக்கு செல்ல 2.5 கிலோமீட்டர் தூரமும், கடத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல 4 கிலோமீட்டர் தூரமும், இதே பாதையை தான், அந்த ஊர் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மழை காலங்களில் இந்த மண் சாலை, பயங்கர மோசமான சகதிகளுடன் காணப்படும். மேலும், பூஞ்சோலை கிராமத்தில் உள்ள பள்ளி மாணவர்கள், இந்த சாலையை பயன்படுத்தி பள்ளிக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பூஞ்சோலை கிராமத்தில் தார்சாலை போட வேண்டும் என்பதற்காக அந்த கிராம மக்கள் 50 வருடங்களுக்கும் மேலாக போராடி வருவதாக கூறப்படுகிறது. சுதந்திரம் கிடைத்ததில் இருந்து, இந்த கிராமத்துக்கு தார் சாலை அமைக்கப்படவில்லை என்று ஊர் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதை அடுத்து, கடந்த செப்டம்பர் மாதத்தில் பூஞ்சோலை நகருக்கு தார் சாலை அமைக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அப்போது, அரசு அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, பூஞ்சோலை நகரில் இருந்து பெருமாள் கோயில் வரை, சாலை அமைக்கும் பகுதியில் 500 மீட்டர் நிலப்பகுதி, பட்டாவில் உள்ளது. அதாவது, அந்த 500 மீட்டர் நிலம் தனியார் விவசாய நிலமாக உள்ளது என்று அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்று வழி கூறும் ஊர் மக்களின் கோரிக்கையை அதிகாரிகள் தட்டிக் கழிப்பதாக கூறப்படுகிறது. இதை அடுத்து, தருமபுரி மாவட்டம் உருவாகி, இன்றளவிலும் இந்த பூஞ்சோலை கிராமத்துக்கு தார் சாலை அமைக்க முடியவில்லை என்று அந்த ஊர் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.