நெல்லை மாவட்டத்தின் ஆழ்வார்குறிச்சியிலிருப்பவர் மைனாரிட்டி சமூகப்பிரிவைச் சேர்ந்த ஐயப்பன். மனைவி முத்து மாரியம்மாள். கிராமங்களில் மைக் செட் கூலியில் ஜீவனம் நடத்தி வரும் இவர்களுக்கு எம்.பி.ஏ. படிக்கும் மகன் பழனி நாராயணன் மற்றும் பி.காம் படிப்பிலிருக்கும் ரஞ்சிதா என்ற மகளும் உண்டு கஷ்டப்பட்ட நிலையிலும் இருவரின் படிப்பிற்கான செலவை செய்து வருபவர்.
கடந்த 02ம் தேதி அருகிலுள்ள கருத்தப்பிள்ளையூரில் மைக் செட் அமைத்துவிட்டு இரவில் தன் மொபட்டில் அந்த ஒதுக்குப் புற சாலையில் திரும்பி வந்திருக்கிறார். வழியில் வயல் வெளியையும், மேல் ஆம்பூர் குளத்தை இணைப்பதற்கான மதகு அமைப்பதற்கு பெரிய பள்ளம் தோண்டப்பட்டு பெரிய சிமெண்ட் பைப் பொருத்தும் வேலை நடைபெற்று வருகிறது. ஆனால் பள்ளம் தொடர்பான எந்த ஒரு எச்சரிக்கைப் பலகையும் தடுப்புச் சுவரையும் காண்ட்ராக்டர் வைக்கவில்லை. பொறுப்பான பொதுப்பணித்துறையும் முக்கியமான இதைக் கவனிக்கவில்லை.
அந்த வழியில் வந்த ஐயப்பனின் மொபட் பக்கத்திலிருந்த மண் குவியலில் மோதி அப்படியே மொபட்டுடன் குழியில் விழ, பெரிய சிமெண்ட் பைப்பில் தலைமோதி நெருகலான பள்ளத்தில் விழுந்தவரின் உயிர் துடி துடித்துப் பறந்திருக்கிறது. அதிகாலையில் அந்தப் பக்கம் விவசாய வேலைக்குப் போனவர்கள் தகவல் தர, ஸ்பாட்டுக்கு வந்திருக்கிறார்கள் கடையம் போலீசாரும், குடும்பத்தார்களும் வழக்கப்படி கடையம் போலீசிலும் வழக்குப் பதிவானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ. பூங்கோதை, ஸ்பாட்டில் எச்சரிக்கை அமைப்புகளில்லாததால் மரணம் சம்பவித்தது கண்டு காரணமான பொதுப்பணித்துறையினரை தொடர்பு கொண்டும் பலனில்லை.
பாதிக்கப்பட்ட ஐயப்பனின் மனைவி முத்து மாரியம்மாளிடம் தன்னால் முடிந்த நிவாரணத் தொகையைத் தனிப்பட்ட முறையில் கொடுத்து உதவிய எம்.எல்.ஏ. பூங்கோதை நடந்தவைகளை நிவாரணம் பொருட்டு அரசு வரை கொண்டு போயிருக்கிறார்.
சாலையைப் பிளந்து பெரிய பள்ளமைமத்து மதகு அமைக்கும் பொதுப்பணித்துறை மக்களின் உயிர் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்ட வேண்டிய குறைந்தபட்ச தடுப்ப சுவரும் அமைக்கவில்லை எச்சரிக்கை போர்டும் வைக்கவில்லை பறி போனது விலை மதிப்பில்லா ஒரு உயிர். அதற்கான உரிய நிவாரணம் கிடைக்காமல் விடமாட்டேன் என்கிறார் எம்.எல்.ஏ. பூங்கோதை.
பலியான ஐயப்பனின் சகோதரன் கணேசனோ. ஜெனரேட்டர் அமைத்து விட்டு பக்கத்து ஊர் செல்கிறேன் என்று மட்டும் இரவில் தகவல் சொன்னார். மறு நாள் காலை உடலை பார்த்தவர்கள் சொன்ன பிறகுதான் விஷயமே உரைத்தது என்றார் பதற்றத்துடன். பறி போனது கூலி வேலை பார்த்து பிழைப்பவரின் உயிர். உயிர்களில் சாதாரணமானவனின் உயிர் அசாதாரணமானவரின் உயிர் என்ற பேதம் கூடவே கூடாது. அது பேராபத்து.