
தமிழ்நாட்டுக்கே கடலை பருப்பு, கடலை எண்ணெய்க்கு விலை வைக்கும் இடமாக உள்ளது புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி. இங்கிருந்துதான் புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை மாவட்ட விவசாயிகள் விதைக் கடலை வாங்கிச் செல்கின்றனர். தற்போது பருவமழை பெய்து வருவதால் பல மாவட்ட விவசாயிகளும் விதைக் கடலை வாங்க தினசரி ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு வரை ஏராளமான கடைகளில் இங்கு 'தரமான குஜராத், ஆந்திரா விதைக் கடலை' கிடைக்கும் என்று விளம்பர பதாகை வைத்திருந்தவர்கள், அதிகாரிகளின் சில ஆய்வுகளுக்குப் பிறகு விதை என்ற வார்த்தையை மறைத்துவிட்டு ‘தரமான கடலை கிடைக்கும்’ என்றே விளம்பர பதாகை வைத்துள்ளனர். கடந்த சில வாரங்களாக விதைக் கடலை விற்பனை அதிகரித்துள்ள நிலையில், திங்கள் கிழமை புதுக்கோட்டை விதை ஆய்வு துணை இயக்குநர் விநாயகமூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் ஆலங்குடி கடலைக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் பல கடைகளிலும் இருந்த விதை கடலைகளுக்கு விதைச் சான்று இல்லாமல் இருப்பதும் முளைப்புத்திறன் குறைவாக இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இதுபோல ரூ. 35.20 லட்சம் மதிப்புள்ள சுமார் 43.82 டன் விதைக் கடலைகளை விற்பனை செய்யக் கூடாது என முடக்கி வைத்தனர். தொடர்ந்து விதைச் சான்று பெறாமல் விதைக் கடலை விற்பனை செய்யக்கூடாது என்று கடை உரிமையாளர்களிடம் அறிவுறுத்தியுள்ளனர். இதேபோல கடந்த ஆண்டும் விதைக் கடலை மூட்டைகள் விற்பனை முடக்கப்பட்டது.
இது குறித்து விவசாயிகள் கூறும்போது, ‘ஆலங்குடி போனால் தரமான விதை கிடைக்கும் என்று நம்பியே பல மாவட்ட விவசாயிகளும் வருகிறோம். ஆனால் இங்கே முளைப்புத்திறன் குறைந்த, விதைச் சான்று பெறாத விதைகள் விற்பதாக அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதே நேரம் ஆய்வு செய்த அதிகாரிகள் தரமான விதை இல்லையென்றால் விற்பனை செய்யக்கூடாது என்று முடக்கியுள்ள 43.82 டன் கடலையும், அதைக் கடைகளில் அப்படியே வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். அதிகாரிகள் சென்ற பிறகு இந்தக் கடலைகளை வியாபாரிகள் என்ன செய்வார்கள் திரும்பவும் எங்களிடமே தரமான விதை என்றுதானே விற்பனை செய்வார்கள்.
முடக்கிய விதை என்னாச்சு என்று இதே அதிகாரிகள் மீண்டும் ஆய்வு செய்வதில்லை. இதனால் பாதிக்கப்படுவது எங்களைப் போன்ற விவசாயிகள்தான். முடக்கிய கடலைகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பார்களா என்றால் இல்லை. கடமைக்கு ஆய்வு என்று இல்லாமல் தரமற்ற கடலைகளை அறவைக்கு அனுப்பிவிட்டு தரமான விதைச் சான்று பெற்ற விதைகளை விற்பனை செய்வதை ஆய்வு மூலம் உறுதி செய்ய வேண்டும்’ என்றனர்.