Skip to main content

கேரள கவர்னரிடம் மனு கொடுத்து வேண்டிய தமிழக விவசாயிகள்

Published on 26/08/2019 | Edited on 26/08/2019

 

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக  பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு கேரள மாநில அரசுக்கு கவர்னராக நியமிக்கப்பட்டவர் சதாசிவம்.  இவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காடப்பநல்லூர் கிராமம். அவ்வப்போது ஈரோடு பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சொந்த ஊர் வருவது வழக்கம்.  அது போல் ஈரோட்டில் செயல்பட்டு வரும் பிரபலமான கல்வி நிறுவனமான வேளாளர் கல்வி அறக்கட்டளையின் பொன் விழா நிகழ்ச்சியில் பங்கேற்க சொந்த ஊர் வந்திருந்தார் கவர்னர் சதாசிவம். 

 

s

 

இன்று கல்லூரியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வந்த அவரிடம்  கீழ் பவானி பாசன விவசாயிகள்(எல்பிபீ) சங்க தலைவர் நல்லசாமி தலைமையில் விவசாயிகள்  மனு கொடுத்தார்கள்.  

 

அவர்கள் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- "கேரளா மாநிலம் அதிக  மழை பொழிவு கொண்ட மாநிலமாகவும், நமது தமிழகம் மழை மறைவு மாநிலமாகவும் இருக்கிறது.  தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் பாண்டியாறு மேற்கு நோக்கி ஓடி புன்னம்புழா என அது பெயர் பெற்று, கேரளாவின் சாளியாற்றில் அந்த நதி கலந்து கள்ளிக்கோட்டைக்கு அருகில் எந்த பயன்பாடும் இல்லாமல் வீணாக அரபிக்கடலில் போய் கலக்கிறது. 

 

தமிழக-கேரளா எல்லையில் தடுப்பணை கட்டி அதை கிழக்கு நோக்கி திருப்பினால் தமிழகத்திற்கு ஒவ்வொரு வருடமும் 14 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும்.    இந்த நீரால்  கோவை, திருப்பூர் மாவட்டங்களின்  குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் எந்த தட்டுப்பாடும் இல்லாமல் கிடைக்கும், அதேபோல் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கு உரிமையுள்ள  நீர் திட்டமாக இது மாறும். பாண்டியாறு-மோயாறு இணைப்பு திட்டம் மூலம் பவானிசாகர் அணையிலிருந்து 124 மைல் நீளம் கொண்ட கீழ் பவானி தலைமை கால்வாய் வழியாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அத்திப்பாளையம் அணை தேக்கத்திற்கு இந்த தண்ணீரை கொண்டு செல்ல முடியும். எங்கும் நில எடுப்பு இருக்காது. சுற்றுப்புறச்சூழலையும் பாதிக்காது.

 

பாண்டியாறு-மோயாறு இணைப்பு திட்டம் பவானி பாசனங்களின் நீர் பற்றாக்குறையை முழுமையாக நிரப்பும், குடிநீர் திட்டங்களுக்கும், காவிரி டெல்டா பாசனங்களுக்கும் கூடுதலான நீர் வளம் சேர்க்கும்.அது மட்டுமல்ல  வீராணம் ஏரிக்கு சென்று சென்னைக்கு குடிநீராகவும் செல்லும்.

 

கேரளாவிற்கு மின்சாரம், தமிழகத்திற்கு தண்ணீர் என்ற அடிப்படையில் மத்திய அரசின் நிதியை கொண்டு இந்த திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். இந்த இரு வடிநில இணைப்பு திட்டம் இந்தியாவின்  இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் வலு சேர்க்கும். மத்திய அரசு அறிவித்திருக்கும் கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்திற்கு ஒரு முன்னோடி வழிகாட்டுதல் திட்டமாக இந்த திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளின் நீண்ட கால எதிர்பார்ப்பாக உள்ளது. ஆகவே தமிழரான கேரள கவர்னர் இதற்கு முன் முயற்ச்சி எடுக்க வேண்டும்" என கூறியிருக்கிறார்கள்.
 

சார்ந்த செய்திகள்