’வங்கிகள் கடன் தருவதை தவிர்ப்பது நல்லது’ என கல்வி கடன் மறுக்கப்பட்டதை எதிர்த்து மாணவி ஒருவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தலைஞாயிறு பகுதியை சேர்ந்தவர் மாணவி தீபிகா. இவர் நிர்வாக ஒதுக்கீட்டில் நர்சிங் படிப்பிற்கு கல்வி கடன் உதவி கேட்டு தலைஞாயிறு பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி கிளையில் விண்ணப்பித்துள்ளார். ஆனால், மாணவி தீபிகாவின் தந்தை ஏற்கனவே பெற்ற வங்கி கடன்களை செலுத்தத் தவறியதால் கல்வி கடன் தர வங்கி மறுப்பு தெரிவித்துள்ளது.
இதையடுத்து, கல்விக்கடன் வழங்க மறுத்த எஸ்.பி.ஐ வங்கியை எதிர்த்து மாணவி தீபிகா உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று உயர்நீமன்ற நீதிபதி வைத்தியநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எஸ்.பி.ஐ வங்கி சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், கல்வி கடன் கேட்ட மாணவி தீபிகாவின் தந்தை ஏற்கனவே பெற்ற வங்கி கடன்களை செலுத்தத் தவறியுள்ளார் என்பதை விரிவாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, மாணவி சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தையும் நீதிபதி கேட்டுக்கொண்டார்.
இருதரப்பு வாதத்தையும் கேட்டபின், வழக்கு குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி ’கடனை செலுத்தாதவர்கள் பின்னால் செல்வதைவிட வங்கிகள் கடன் தருவதை தவிர்ப்பது நல்லது’ என்றார். மேலும் வங்கியின் விளக்கத்தை ஏற்று மாணவியின் மனுவை தள்ளுபடி செய்தார்.