
சென்னை பரங்கிமலையில் இன்று காலை ரயிலில் தொங்கியபடி சென்றவர்கள் பக்கவாட்டு தடுப்புச்சுவற்றில் மோதினார்கள். இந்த விபத்தில் தலை வேறு உடல் வேறாக சிதறி 5 பேர் பலியானார்கள். இதனால் அடையாளம் காண்பதே போலீசாருக்கு சிரமமாக உள்ளது. இதே ரயில் நிலையத்தில் நேற்று இரவு 2 பேர் பலியானார்கள்.
சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே ஏடிஜிபி சைலேந்திரபாபு இந்த விபத்து குறித்து, ’’கவனக்குறைவினால் படிக்கட்டில் பயணம் செய்ததால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துக்கு காரணம் என்று கூறப்படும் தடுப்புச்சுவர் பல ஆண்டுகளாக உள்ளது. பயணிகள் படியில் நின்று பயணம் செய்யாமல் வரவேண்டும். அவர்கள் படியில் பயணம் செய்யக்கூடாது என்று ரயில் நிலையங்கள் தோறும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது’’என்று விளக்கம் அளித்தார்.
பயணிகளின் கவனக்குறைவு என்று சைலேந்திரபாபு கூறினாலும், அதிகாரிகளின் மெத்தனப்போக்குதான் இந்த விபத்துக்கு காரணம் என்று பயணிகள் தெரிவிக்கின்றனர். மக்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் ரயில்களையோ, கூடுதல் ரயில் பெட்டிகளையோ இணைக்காமல் அதிகாரிகள் மெத்தனப்போக்குடன் இருப்பதால்தான் இப்படி மக்கள் முண்டியடுத்துக்கொண்டு ஏறி தொங்கிக்கொண்டு செல்கின்றனர் என்று ஆவேசமாக தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில் விபத்துக்கு காரணமான தடுப்புச்சுவற்றை இடிக்க அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.