Skip to main content

தீபாவளி வசூல்; கட்டுக்கட்டாக பணத்துடன் சிக்கிய அதிகாரி

Published on 10/11/2023 | Edited on 10/11/2023

 

Officer arrested for taking bribe on Diwali in Trichy

 

திருச்சிராப்பள்ளி மாவட்ட விற்பனை குழு அலுவலகம், திருச்சி பாலக்கரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் செயலாளராக சுரேஷ் பாபு என்பவர் இருந்து வருகிறார். இவர் திருப்பூர் மாவட்டத்திற்கும் முதல்நிலை செயலாளராக கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். இவருடைய கட்டுப்பாட்டில் திருச்சி மாவட்டத்தில் 14 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களும் திருப்பூர் மாவட்டத்தில் 15 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களும் இருந்து வருகிறது.

 

இந்த இரண்டு மாவட்டங்களில் உள்ள விற்பனையாளர்களிடம் இருந்து செயலாளர் சுரேஷ்பாபு தீபாவளி வசூல் செய்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் துணை வட்டாட்சியர் பிரேம்குமார், ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்னா வெங்கடேஷ், பாலமுருகன், சேவியர் ராணி மற்றும் குழுவினருடன் திருச்சி பாலக்கரையில் உள்ள திருச்சிராப்பள்ளி விற்பனை குழு அலுவலகத்தில் இன்று(10.11.2023) மதியம் 12 மணியளவில் திடீர் சோதனை செய்தனர். 

 

சோதனையில், சுரேஷ் பாபுவிடம் இருந்து கணக்கில் வராத 90 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. மேலும் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் செயலாளர் சுரேஷ் பாபு விற்பனையாளர்களிடமிருந்து வசூல் செய்த தொகையை தான் தங்கி இருக்கும் இடத்தில் கிராப்பட்டியில் வைத்திருப்பதாக சொன்னதன் பேரில் கிராப்பட்டியில் இவர் தங்கி இருக்கும் அறையைச் சோதனை செய்தனர். அதில், கணக்கில் வராத 8 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் சேர்த்து மொத்தம் 9 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. மேலும் மேற்படி செயலாளர் சுரேஷ் பாபுவிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்