ஒடிசா மாநிலத்தில் கடந்த 2 ஆம் தேதி இரவு இரண்டு பயணிகள் இரயில் மற்றும் ஒரு சரக்கு இரயில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து துயரமான இந்த சம்பவத்திற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும். இந்த விபத்திற்குப் பொறுப்பேற்று இந்திய ரயில்வே துறை அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனப் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இந்த விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என ரயில்வே வாரியம் பரிந்துரை செய்தது. இதையடுத்து ரயில் விபத்து குறித்து முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் ரயில் விபத்தில் 288 பேர் இறந்துள்ளதாக அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வரும் காலங்களில் ரயில் விபத்து போன்ற அசாதாரண சம்பவங்கள் நிகழாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தில், பணியின் போது ரயில் ஓட்டுநர்கள் கைகளில் ஸ்மார்ட் வாட்ச் அணியத் தடை விதித்து ரயில்வே துறை அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.