உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி அரக்கோணம் அடுத்த கும்பினிபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு நடத்தினார். அப்போது பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு சாப்பாடு மற்றும் முட்டை வழங்குவதை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது 7 மாணவர்களுக்கு முட்டை கிடைக்கவில்லை.
இதைத்தொடர்ந்து முட்டைகள் இருப்பு வைக்கும் அறை மற்றும் அரிசி, பருப்பு வைக்கும் அறையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் சத்துணவு முட்டைகள் போதுமான அளவு இருப்பு இல்லை என்பது கண்டறியப்பட்டது. இது குறித்து சத்துணவு அமைப்பாளர் மலர் என்பவரிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டதற்கு வேறு பள்ளியில் முட்டைகள் இறக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில் பதிவேடுகளை முறையாக பராமரிக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சத்துணவு அமைப்பாளர் மலரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டார். மேலும் சத்துணவு அமைப்பாளர் மலர் பணியில் சேர்ந்த நாளிலிருந்து இதுநாள் வரை பதிவேடுகள் முறையாக பராமரித்துள்ளாரா? அந்த பதிவேடுகளில் ஏதேனும் குறைகள் கண்டறியப்பட்டால் அதற்கு உண்டான அபராதம் விதிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியரின் அதிரடி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.