கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் அண்மையில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்தனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசுகையில்மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். மழையால் உயிரிழந்தவர்களுக்கு வழங்கும் நிவாரணம் ரூ. 4 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு ரேஷன் அட்டைகளுக்குத் தலா ரூ.1,000 வழங்கப்படும்” என்று தெரிவித்தார். அதன்படி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1000 நிவாரணத் தொகையை வழங்கினர். இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை வெள்ள நிவாரண ரூ.1000 வாங்காத அல்லது விடுபட்ட குடும்ப அட்டைத்தாரர்களுக்கு எப்போது நிவாரண நிதி வழங்கப்படும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 17.12.2023 மற்றும் 18.12.2023 ஆகிய இரண்டு நாட்கள் பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெள்ள நிவாராணத் தொகையாக தலா ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்ததை தொடர்ந்து, உதவித்தொகை வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 5,77,803 குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வெள்ள நிவாரண உதவித்தொனை கடந்த 29.12.2023 அன்று முதல் அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நியாயவிலைக்கடைகள் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இதுநாள் வரை நிவாரணத்தொகை வாங்காத விடுப்பட்ட குடும்ப அட்டைத்தாரர்களுக்கு நாளை (03.01.2024) வழங்கப்படும். எனவே விடுப்பட்ட குடும்ப அட்டைத்தாரர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நியாயவிலைக்கடைகளுக்கு சென்று தங்களது நிவாரண உதவித்தொகையினை பெற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளார்.