தேனி அருகே கிராமம் ஒன்றில் சாலை வசதி இல்லாமல் நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் டோலி கட்டி தூக்கி செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தேனி மாவட்டம் சின்னூர் காலனியைச் சேர்ந்த மாரியம்மாள் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். சாலை வசதி இல்லாததால் அந்த பகுதி மக்கள் டோலி கட்டி பாதிக்கப்பட்ட பெண் மாரியம்மாளை நேற்று மருத்துவமனையில் கொண்டு சேர்த்திருந்தனர். சுமார் ஏழு கிலோமீட்டர் தூரத்திற்கு காற்றாற்று அருவிகளை கடந்து கிராம மக்கள் பெண்ணை டோலியில் தூக்கி செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி இருந்தது.
தொடர்ந்து பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாரியம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தற்பொழுது சின்னூர் பகுதிக்கு மீண்டும் அவரது உடலை கிராம மக்கள் டோலி கட்டி தூக்கிச் சென்றுள்ளனர்.