Skip to main content

"என்.எல்.சியின் மின் உற்பத்தி திறன் விரைவில் 10,151 மெகாவாட்டாக அதிகரிக்கும்!" - ராகேஷ்குமார் 

Published on 16/08/2022 | Edited on 16/08/2022

 

"NLC's power generation capacity to increase to 10,151 MW soon!" - Rakesh Kumar

 

இந்திய நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் பாரதி விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. என்.எல்.சி தலைவர் ராகேஷ்குமார் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, மத்திய தொழிலக பாதுகாப்பு படை மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

 

பின்னர் என்.எல்.சி முதன்மை நிர்வாக இயக்குநர் ராகேஷ்குமார் பேசுகையில், “புதுப்பிக்க வல்ல ஆற்றல் துறையின் மூலம் உற்பத்தி செய்ய வேண்டிய மின்சக்தியின் அளவினை உறுதி செய்யும் வகையில் இந்திய அரசு ஹைட்ரஜன் வாயு மூலம் பசுமை மின் சக்தி உற்பத்தி செய்ய முக்கியத்துவம் வழங்கி வருகிறது. நெய்வேலி என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் மூலம் பசுமை ஹைட்ரஜன் வாயு மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கான ஆராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. என்.எல்.சி நிறுவனம் நவீன முறை மின் உற்பத்தி, நவீன தொழில் நுட்பமான பசுமை ஹைட்ரஜன் வாயு மூலம் மின் சக்தி தயாரிக்கும் வர்த்தகத்தை தொடங்குவதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

 

என்.எல்.சி நிறுவனம் அசாம் மாநிலத்தில் உள்ள ஏ.பி.டி.சி.எல் நிறுவனத்தோடு 1000 மெகாவாட் மின் உற்பத்திக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலமாக இந்தியாவில் உள்ள ஆறாவது மாநிலத்தில் என்.எல்.சி இந்தியா நிறுவனம் கால் பதித்துள்ளது. ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கூடுதலாக மின் உற்பத்தி செய்ய புதிய அலகுகள் அமைப்பதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. இந்தியாவின் சுரங்கம் மற்றும் மின்துறையின் அடுத்த கட்ட வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கு வழிவகுப்பது பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். 

 


புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மற்றும் புதிய தூண்டுதல்களில் பன்முகப்படுத்துதல், வணிகச் சுரங்கம், மின்சார வாகனத்தின் நிறுவல், சார்ஜிங் நிலையங்கள், நிலக்கரியுடன் லிக்னைட்டை இணைத்தல், லிக்னைட் முதல் டீசல் வரையிலான புதிய வழிகளை ஆராய்தல். நிலக்கரி முதல் மெத்தனால், நிலத்தடி நிலக்கரி வாயுவாக்கம், நிலக்கரி தொகுதி மேம்பாட்டிற்கான சுரங்கங்களை கட்டுமான மணலாக மாற்றுதல், கான்சூடானாய் சேவைகள் மற்றும் சூரிய சக்தி திட்டங்களில் நுகர்வோர் என அனைத்தும் 'எதிர்காலத்தின் டிஜிட்டல் மைன்' ஆகவும், 'டிஜிட்டல் பவர் ஹவுப்' ஆகவும் விளங்கும்.

 


நமது மின் உற்பத்தித் திறன் தற்போது 6081.06 மெகாவாட்டை எட்டியுள்ளது. என்.எல்.சியின்  2021-22 ஆம் ஆண்டிற்கான மொத்த வருமானம் ரூ 12545.96 கோடி ஆகும். இது  முந்தைய நிதியாண்டின் ரூ 11798.42 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. வரி செலுத்திய பின்பு மொத்த வருமானம் ரூ 568.83 கோடி என 59.07% வளர்ச்சி அடைந்துள்ளது. 

 


மத்திய மற்றும் மாநில கருவூலத்திற்கு 2200 கோடி. இதில் மத்திய அரசின் பங்கு 148 கோடியும், தமிழ்நாடு மாநிலத்திற்கு 460 கோடியும் ரூபாய் கிடைத்துள்ளது. என்.எல்.சி மின் உற்பத்தி நிலையங்களின் முக்கிய பயனாளியாக தமிழ்நாடு உள்ளது. எந்த காலாண்டிலும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக மின் உற்பத்தி அடைந்து  2022-23 நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் அனைத்து அனல் மின் நிலையங்களிலும் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. நமது வளர்ச்சி இலக்குகளுக்கு ஏற்ப 10,151 மெகாவாட் மின் உற்பத்தி திறனை அடைய பல்வேறு திட்டங்கள் உருவாகி வருகின்றன” என்று தெரிவித்தார். 

 


இந்நிகழ்ச்சியில் என்.எல்.சி இயக்குநர்கள், உயரதிகாரிகள், ஊழியர்கள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள், நெய்வேலி நகரில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளி மாணவ மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர். பள்ளி, மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.

 

 

சார்ந்த செய்திகள்