என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் வருடாந்திர பராமரிப்பு பணிகளில் ஈடுபடும் ஒப்பந்த தொழிலாளர்களைத் தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் என்.எல்.சி தொழிலாளர்கள் கூட்டுறவு சேவை சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்ப்பதற்கான பணிமூப்பு பட்டியலை என்.எல்.சி முதன்மை நிர்வாக இயக்குநர் ராகேஷ்குமார் வெளியிட்டார். இதுகுறித்து என்.எல்.சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “என்.எல்.சி இந்தியா நிறுவன பணிகளை, தமிழ்நாடு அரசின் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் தமிழக கூட்டுறவு சேவை சங்கம், அலுவலக பராமரிப்பு சேவை சங்கம் ஆகியவற்றில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் மற்றும் தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் பணியாற்றும் தொழிலாளர்கள் மேற்கொண்டுவருகின்றனர்.
மேற்கூறிய தொழிலாளர்களுக்கு கூடுதல் ஊதியம், சலுகைகள் வழங்குவது தொடர்பாக 1947ஆம் ஆண்டின் தொழில் தகராறு சட்டத்தின் 12(3) பிரிவின் கீழ் ஒப்பந்ததாரர்களுக்கும், ஒப்பந்ததாரர்கள் சார்ந்த தொழிற்சங்கங்களுக்கும் இடையே ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. என்.எல்.சி அதிகாரிகள் முன்னிலையில் (07.08.2020) அன்று கையெழுத்தானது. அந்த உடன்படிக்கையில் ஒப்பந்த தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிப்பது, வருடாந்திர பராமரிப்பு பணிகளில் கூட்டுறவு சங்கம் மூலம் பணியாற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை 5 ஆயிரத்திலிருந்து 8 ஆயிரமாக அதிகரிப்பது, இதற்கான பட்டியலை ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட பட்டியலின் அடிப்படையில் தயாரிப்பது எனவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. எனவே ஒப்பந்த தொழிலாளர்களை என்.எல்.சி தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்ப்பதற்கான நடைமுறைகளைக் கண்டறிய என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட பணிமூப்பு பட்டியலில் இருந்து 3,509 தொழிலாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பெறப்படும் கோரிக்கைகள், முறையீடுகளைப் பரிசீலித்த பிறகு இறுதி பட்டியல் வெளியிடப்பட உள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல் வெளியீடு நிகழ்ச்சியில் என்.எல்.சி இந்தியா நிறுவன முதன்மை நிர்வாக இயக்குநனர் ராகேஷ்குமார், 3,509 தொழிலாளர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டார். நிறுவனத்தின் மனிதவள இயக்குநர் விக்ரமன், செயல் இயக்குநர் சதீஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான தொழிலாளர் முன்னேற்ற சங்கம், அண்ணா தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.