கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் சாலை பராமரிப்பு பிரிவில் சுமார் 35 தொழிலாளர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர். இங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் ஏ.டி.எம் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், அடையாள அட்டை உள்ளிட்டவைகளை சாலை பராமரிப்பு பணிகளை என்.எல்.சியிடமிருந்து ஒப்பந்தம் எடுத்துள்ள ஒப்பந்ததாரர் வாங்கி வைத்துக் கொண்டு தொழிலாளர்களுக்கு என்.எல்.சி வழங்கும் ஊதியத்தை குறைவாக கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.
மேலும் ஒப்பந்ததாரர்களிடம் ஏ.டி.எம் கார்டு, வங்கி புத்தகம் உள்ளிட்டவைகளை தர மறுத்த 8 தொழிலாளர்களை கடந்த ஒரு ஆண்டு காலமாக பணியில் இருந்து நீக்கி உள்ளனர். இதனை கண்டித்து என்.எல்.சி பொது காண்ட்ராக்ட் தொழிலாளர் ஊழியர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நெய்வேலி நகர நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. நுழைவாயில் முன்பு காவல்துறையினர் தடுத்து நிறுத்தி தொழிலாளர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து கலைந்து சென்றனர்.
அப்போது தொழிலாளர்கள் ஊழியர் சங்கத்தினர் கூறியதாவது " பணியில் இருந்து நீக்கிய எட்டு தொழிலாளர்களுக்கும் பாண்டிச்சேரியில் தொழிலாளர் நல அதிகாரிகள் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மீண்டும் வேலை வழங்க வேண்டும் என எழுத்து மூலம் அறிவுறுத்தியுள்ளனர். இதுவரை என்.எல்.சி நகர நிர்வாகம் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கவில்லை. மேலும் தமிழக முதலமைச்சர், மாவட்ட ஆட்சித்தலைவர், மத்திய தொழிலாளர் நல ஆணையர்களுக்கு பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சார்பில் கடிதம் அளிக்கப்பட்டது. குறிப்பாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள நிலுவைத் தொகையை எடுக்க முடியாமல் நிறுத்தி வைத்துள்ளனர். காண்ட்ராக்ட் முதலாளிகளுக்கு என்.எல்.சி அதிகாரிகள் ஆதரவாக செயல்படுகின்றனர். பாதிக்கப்பட்ட 8 தொழிலாளர்களுக்கும் 10 நாட்களுக்குள் வேலை வழங்காவிட்டால் என்.எல்.சி நிர்வாகத்தைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும்" எனத் தெரிவித்துள்ளனர்.