Skip to main content

போன் செய்தால் வீட்டுக்கே வரும் அரசு மருத்துவர்கள்!

Published on 03/12/2019 | Edited on 03/12/2019

திருவண்ணாமலை மாவட்டத்தில், தண்டுவட காயம், கழுத்து எலும்பு முறிவு போன்ற காயங்கள் காரணமாக கை கால்கள் முற்றிலும் செயலிழந்தவர்கள் நீண்ட நாட்களாக படுக்கையில் இருப்பதால், படுக்கை புண் ஏற்பட்டு முற்றிலும் செயலற்ற நிலையில் உள்ளனர். மேலும், மார்பக புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய், கடுமையான நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் இதே போன்று செயலற்ற நிலையில் மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற இயலாத நிலையில் உள்ளனர். அவசர நிலையின் போதும், உடல்நிலை மிகவும் நலிவுற்ற நிலையிலும் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லும் போது நோயாளிகளும், அவர்களை அழைத்து வரும் உறவினர்கள், நண்பர்கள் அதிக சிரமப்படுகின்றனர்.

patient once call govt doctors arrive home free service start tiruvannamalai


இதனை கருத்தில் கொண்டு உடல் பாதிப்புகளால் மருத்துவமனைக்கு செல்ல இயலாதவர்களுக்கு வீட்டிலேயே சென்று இலவச மருத்துவ உதவி அளிப்பதற்காக 24 நேரமும் செயல்படும் வகையில் 8925- 123- 450 என்ற கைபேசி எண் மூலமாக மருத்துவ அழைப்பு (medi call) என்ற எண் திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.


இதற்கான விழா, திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பெருங்கட்டூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. மருத்துவமனை செல்ல இயலாதவர்கள், மாவட்ட சுகாதாரத்துறை அறிவித்துள்ள மொபைல் எண்ணுக்கு போன் செய்தால் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவர்கள் வீட்டுக்கே வந்து சிகிச்சை அளிப்பார்கள். இது கட்டணமில்லா சேவை.

patient once call govt doctors arrive home free service start tiruvannamalai


இந்த சேவையை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி, நவம்பர் 1ந்தேதி துவக்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த அமைப்பின் கீழ் உள்ள 18 வட்டார மருத்துவமனைகளும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணை அழைத்து உதவி கோரும் போது தொடர்புடைய வட்டாரத்தில் பணிபுரியும் நோய்தடுப்பு சிகிச்சை பணியாளர், உடல்நிலை பாதிக்கப்பட்ட நோயாளியின் வீட்டிற்கே சென்று தேவைப்படும் மருத்துவ உதவிகள் அளிப்பார்கள்.


திருவண்ணாமலை மாவட்டத்தில் பக்கவாத நோயால் கை, கால்கள் செயல் இழந்தவர்கள் 487 பேரும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 118 பேரும், தண்டுவட காயம்பட்டவர்கள் 62 பேரும், மனநலம் குன்றியவர்கள் 15 பேர், நீண்ட நாள் படுத்த படுக்கையாக இருப்பதால் படுக்கை புண் வந்த 65 பேர், வயது முதிர்வால் நடமாட இயலாதவர்கள் 191 பேர் மற்றும் வேறு சில நோய்கள் தாக்கியவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களது வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கவுள்ளார்கள்.


வீட்டிலேயே முடங்கியுள்ள நோயாளிகள் அவசர சிகிச்சை தேவைப்படும் போது 8925 - 123450 என்ற மருத்துவ அழைப்பு (medi call) எண்ணை தொடர்பு கொள்ளலாம், மற்ற ஆரம்ப சுகாதார மையங்களும் இதில் இணைத்தால் சிறப்பானதாக இருக்கும்.


 

சார்ந்த செய்திகள்