என்.எல்.சி. நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் மேல்வளையமாதேவி கிராமத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் விளை நிலங்களில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு கால்வாய் வெட்டும் பணி கடந்த 26, 27 ஆம் தேதி என இரு நாட்கள் நடைபெற்றது. விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களை 20க்கும் மேற்பட்ட ராட்சத மண் வெட்டும் வாகனங்கள் மூலம் அழித்துக் கால்வாய் வெட்டுவதற்கு விவசாயிகள், அரசியல் கட்சியினர் எனப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். என்.எல்.சி. நிறுவனம் உரிய இழப்பீடு வழங்காமல் நிலம் கையகப்படுத்தும் பணியைத் தொடங்கியுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். நிலம் கையகப்படுத்தும்போது வழங்கப்பட்ட இழப்பீட்டில் ஏராளமான குளறுபடிகள் நடந்துள்ளதாகவும், அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் நெற்பயிர்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்துக் கடந்த 28 ஆம் தேதி பாமக சார்பில் என்.எல்.சி நிர்வாகம் தரப்பில் விளைநிலங்கள் கையகப்படுத்துவதைக் கண்டித்துப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடைபெற்றது. பின்னர் இந்தப் போராட்டம் வன்முறையாக மாறியது. அன்றைய தினம் என்.எல்.சி. நிறுவனம் கால்வாய் வெட்டும் பணியைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. அதனைத் தொடர்ந்து வளையமாதேவியில் விளைநிலங்களை அழித்து மீண்டும் கால்வாய்க் கரைகளைப் பலப்படுத்தும் பணிகளை என்.எல்.சி. நிறுவனம் நேற்று முன்தினம் மீண்டும் தொடங்கியது.
மேலும் விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ஐந்தாவது நாளாக இன்றும் நெற்பயிர்களை அழித்து மேல்வளையமாதேவியில் புதிய பரவனாறு திட்டத்தின் கீழ் கால்வாய் வெட்டும் பணியில் என்.எல்.சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. நேற்று இரவில் இருந்து விடிய விடிய என்.எல்.சி. நிறுவனம் சார்பில் 8 பொக்லைன் இயந்திரம் மூலம் கால்வாய் வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதே சமயம் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த விளை நிலங்களில் கால்வாய் வெட்டும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் என்.எல்.சி. நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரம் தொடர்பாக விவசாயி முருகன் என்பவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் அறுவடை செய்யும் வரை விவசாயிகளுக்குத் தொல்லை தரக் கூடாது. கையகப்படுத்தப்பட்ட நிலத்தை 5 ஆண்டுகளாக பயன்படுத்தவில்லை என்பதால் மீண்டும் விவசாயிகளிடம் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை உயர் நீதிமன்றம் அவசர வழக்காக எடுத்துக்கொண்டுள்ளதால் இன்று மதியம் விசாரணைக்கு வருகிறது.