புதுச்சேரியில் 'நிவர்' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, மத்திய அரசின் இணைச் செயலர் அசுதோஷ் அக்னிகோத்ரி தலைமையிலான மத்தியக் குழு இன்று (07.12.2020) ஆய்வு செய்தது.
புதுச்சேரி நகரப்பகுதியில் இருந்து புறப்பட்டு, பத்துக்கண்ணு, வழுதாவூர் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட சாலை பாதிப்பு, ராமநாதபுரம் கிராமப் பகுதியில் பாதிக்கப்பட்ட வாழைத் தோட்டங்கள், சந்தை புதுக்குப்பம் பகுதியில் பாதிக்கப்பட்ட கரும்பு மற்றும் நெல் பாதிப்புகளைப் பார்வையிட்ட குழுவினர், சுல்தானா நகர் குடியிருப்புப் பகுதிகளைப் பார்வையிட்ட பின், தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளின் சேதங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் அஸ்வினிகுமார் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தனர். பின்னர், சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து, ஆலோசனை மேற்கொண்ட பிறகு கடலூர் சென்றனர்.
மத்தியக் குழுவின் ஆய்விற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, "புயல் பாதிப்பு நிவாரணமாக முதல் கட்டமாக, 100 கோடி ரூபாய் கேட்டுள்ளோம். புயல் சேத மதிப்பீட்டுத் தொகையை, மத்திய அரசு மறுமதிப்பீடு செய்ய வேண்டும். புயல் மற்றும் மழையால், புதுச்சேரி அடிக்கடி பாதிக்கப்படுகிறது. இதனால், நிரந்தரத் தீர்வும், பேரிடர் நிதியும் ஒதுக்கவேண்டும் என்று கேட்டுள்ளோம்.
மக்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக, அரிசிக்கு வழங்கப்படும் பணம் தற்போது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மஞ்சள் அட்டைதாரர்களுக்கு 1,000 ரூபாயும், சிவப்பு அட்டைதாரர்களுக்கு 2,200 ரூபாயும் வழங்கப்படும்" என்றார்.