நிவர் புயலால் கனமழை பெய்யக்கூடும் என்பதால், சேலம் மாவட்டத்தில் 23 பகுதிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறியுள்ளது. இதற்கு நிவர் புயல் என பெயரிடப்பட்டுள்ளது. இதனால் சென்னை, கடலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
சேலம் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, அதிகளவு மழைப்பொழிவு இருக்கும்பட்சத்தில் மாவட்டத்தில் எந்தெந்த இடங்களில் தண்ணீர் தேங்கும் அபாயம் இருக்கிறது என்பது குறித்து கண்டறியப்பட்டு உள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் மொத்தம் 23 பகுதிகள் பதற்றமான இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாம் அமைத்து, அங்கு தங்க வைக்கப்படும் பொதுமக்களுக்கு அனைத்து வசதிகளும் தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் கடித்தால் அதற்குரிய மருந்துகளை தயார் நிலையில் வைத்திருக்க அரசு மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மீட்பு பணிகளுக்குத் தேவையான எக்ஸ்கவேட்டர் இயந்திரம், ஜெனரேட்டர், மரம் அறுக்கும் உபகரணம், டார்ச் லைட், தீப்பெட்டிகள் உள்ளிட்ட உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
மாவட்டம் முழுவதும் நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கனமழையின்போது பொதுமக்கள் திறந்த வெளியில் நிற்காமல் மேற்கூரை உள்ள இடங்களில் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. புயல், மழையால் பாதிப்பு ஏற்பட்டாலோ, உதவிகள் தேவைப்பட்டாலோ அதுகுறித்த தகவலை தெரிவிக்க வசதியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் கால கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் 24 மணி நேரமும் செயல்படும்.
பொதுமக்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கோ, 0427- 2452202 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.