கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகில் உள்ளது திருப்பனையூர் தக்கா. இந்த கிராமத்தைச் சேர்ந்த பாஷா என்பவரின் மகன் ஷான் (47). இவர் அருகிலுள்ள கூவனூர் என்ற கிராமப் பகுதியில் மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறார். அதே கிராமத்தில் வசித்துவரும் சையது அனீஃப் என்பவரது மகன் ஹாரூண் (40). விவசாயியான இவர் நாட்டுத் துப்பாக்கி வைத்துள்ளார்.
அதற்கான உரிமம் பெற்றுள்ளார். அந்தத் துப்பாக்கி மூலம் கடந்த சில வருடங்களாக அப்பகுதியில் உள்ள கொக்கு, காடை உட்பட பறவைகள் மற்றும் காட்டு விலங்குகளை வேட்டையாடி வருவது உண்டு. இந்த நிலையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் மைக் செட் ஒலிபரப்பும்போது அதன் சத்தம் அதிகமாக உள்ளது என்ற பிரச்சினை ஏற்பட்டு, அதன் காரணமாக ஷானுக்கும் ஹாரூணுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று காலை ஷான், தன் மளிகைக் கடையில் வியாபாரத்தை முடித்துவிட்டு மதியம் ஒரு மணியளவில், அப்பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு தொழுகை நடத்துவதற்காகச் சென்றுள்ளார். மியா சுதீன் என்பவரது வீட்டின் அருகே, ஷான் சென்று கொண்டிருந்தபோது அங்கு மறைந்திருந்த ஹாரூண் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் ஷானுடைய நெஞ்சில் குறிபார்த்துச் சுட்டுள்ளார். துப்பாக்கி வெடித்தச் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்துள்ளனர்.
அப்போது ஷான் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அருகில் இருந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர். இந்தத் தகவல் அறிந்த திருப்பாலபந்தல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்துள்ளனர். பின்னர் அதே பகுதியில் துப்பாக்கியுடன் பதுங்கி இருந்த ஹாரூணை கைது செய்தனர்.
தகவலறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு, விசாரணை நடத்தியுள்ளார். பின்னர் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். தீபாவளிப் பண்டிகை நேரத்தில் மக்கள் சந்தோஷமாக இருக்கும் வேளையில், மளிகைக் கடை உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.