'வங்கக்கடலில் உருவான 'நிவர்' புயல் புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது 120 கி.மீ. முதல் 145 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியது.
இந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், சாலைகளில் போக்குவரத்து குறைவாக இருந்தாலும் பலத்த காற்று காரணமாக வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.
சென்னை மேற்கு தாம்பரம் அருகே முடிச்சூரில் மழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர். வீடுகளைச் சுற்றி சூழ்ந்துள்ள மழைநீரை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிகள் வலியுறுத்தி உள்ளனர்.
அடுத்த மூன்று மணி நேரத்தில் 'நிவர்' புயல் மேலும் வலுவிழக்கும். புதுச்சேரியில் இருந்து வடமேற்கே 50 கி.மீ. தொலைவில் நிலப்பகுதியில் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை தாம்பரத்தில் 31.4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல், விழுப்புரம்- 28 செ.மீ., சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்- 27.8 செ.மீ., கடலூர்- 27.5 செ.மீ. மழை பதிவானது.