கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகேயுள்ள தெற்கு சேப்ளாநத்தம் ஊராட்சியில் சுமார் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் தேதி அந்த ஊராட்சியின் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜலட்சுமி, உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். ஊராட்சி மன்றத் தலைவர் உயிரிழந்ததால், தெற்கு சேப்ளாநத்தம் ஊராட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தக் கோரி அந்தக் கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்துள்ளனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாததால், தமிழக தேர்தல் ஆணையம் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அக்கிராம மக்கள் மனு அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், ஊராட்சி மன்றத் தலைவர் உயிரிழந்து ஒரு வருடத்திற்கு மேலாகியும், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்த மாவட்ட நிர்வாகம் முன்வராததால், அக்கிராமத்தினர் சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
இதனால், ஆத்திரமடைந்த அக்கிராம மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர், நெய்வேலி மேட்டுக்குப்பம் ஆர்ச் கேட் முன்பு, மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப் போக்கை கண்டித்தும், பொதுமக்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித்தர முயற்சி செய்யாத தமிழக அரசை கண்டித்தும், கருப்புக்கொடி ஏந்தி, கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது தங்களது கிராமத்திற்கு உடனடியாக ஊராட்சி மன்றத் தலைவருக்கான தேர்தல் நடத்த வேண்டும் என்றும், என்.எல்.சி நிறுவனத்தினால் பாதிக்கப்பட்ட தங்களது கிராமத்திற்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த கட்டமாக கிராம மக்கள் ஒன்று சேர்ந்து சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.