Skip to main content

கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு... 

Published on 01/02/2021 | Edited on 01/02/2021

 

New restriction for Kodaikanal tourists ..

 

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள மலைகளின் இளவரசியான கொடைக்கானல் சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலை விசிட் அடித்து கோடை இளவரசியை ரசித்து விட்டுச் செல்வது வழக்கம்.

 

ஆனால், இன்று (01.02.2021) முதல் கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு, நகராட்சி நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள், வாட்டர் பாட்டில் மற்றும் குளிர்பானம் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் 1,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட உள்ளது. 

 

சுற்றுலா நகர் கொடைக்கானலில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக்கைத் தவிர்க்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஐந்து லிட்டருக்கு குறைவான குடிநீர் பாட்டில், குளிர் பானம் உள்பட இதர பொருட்களைத் தவிர்க்கும்படி குறிப்பிட்டுள்ளது. இதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் கொடைக்கானலுக்கு குடிநீர் பாட்டில், குளிர்பானம் உள்ளிட்டவற்றைக் கொண்டுவர சுற்றுலா பயணிகளுக்கும், பிப்ரவரி 7ஆம் தேதி முதல் குடிநீர் பாட்டில், குளிர்பானங்களை நகரில் விற்பனை செய்யவும் தடை என  சப்-கலெக்டர்  சிவகுரு பிரபாகரன் மற்றும் நகராட்சி கமிஷனர் நாராயணன் தெரிவித்தனர்.

 

இந்த நடைமுறை நகராட்சி மற்றும் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அமலுக்கு வருகிறது. மீறுவோருக்கு கண்காணிப்புக் குழு மூலம் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இது சம்பந்தமாக கொடைக்கானல் நகராட்சி கமிஷனர் நாராயணனிடம் கேட்டபோது, “நகராட்சியில் நான்கு இடங்கள் உள்பட மொத்தம் 15 இடங்களில் பிப்ரவரி 5ஆம் தேதிக்குள் வாட்டர் ஏ.டி.எம். இயந்திரங்கள்  அமைக்கப்படும். பஸ் உள்ளிட்ட வாகனங்களில் வாட்டர் பாட்டில், குளிர்பானம் கொண்டு வருவதைத் தடுக்க இன்று முதல் வெள்ளி நீர்வீழ்ச்சியில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். பிப்ரவரி 7ஆம் தேதி முதல் முற்றிலும் தடை விதிக்கப்பட்டு, மலிவு விலையில் ஏ.டி.எம். மூலம் குடிநீர் வழங்கப்படும்” என்று கூறினார்.

 

இப்படி திடீரென வாட்டர் பாட்டில் கொண்டுவர தடை விதிக்கப்பட்டிருப்பதைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்