திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் இயந்திரங்கள் உடைக்கப்பட்டு 72.5 லட்ச ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த கொள்ளை குற்றவாளிகள் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்கிறது காவல்துறை. ஹரியானா மாநிலத்தில் ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து திருடுவதில் பயிற்சி பெற்ற குற்றவாளிகள் உள்ளார்கள். அவர்கள் இந்தியா முழுவதும் சென்று திருடுவார்கள் என்கிறார்கள். கொள்ளை குற்றவாளிகளைப் பிடிக்க 5 எஸ்.பிக்கள் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு, வடமாநிலத்துக்கு ஒரு டீம் பயணம், செல்போன் பதிவுகள் ஆய்வு, வங்கி ஏடிஎம் ஏஜென்சி டீமில் இருப்பவர்களிடம் விசாரணை எனச் சென்று கொண்டிருக்கிறது.
இதனிடையே தனிப்படை போலீசார் ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட பிற மாநிலங்களுக்குச் சென்று விசாரணை நடத்தியதில், பெங்களூரில் இந்த ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த நபரை கைது செய்து திருவண்ணாமலை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திருவண்ணாமலை ஏடிஎம்களில் கொள்ளையடிக்க 3க்கும் மேற்பட்டவர்கள் வந்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவரிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.