Skip to main content

சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் பொறுப்பேற்பு!

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
New Commissioner of Chennai Corporation takes charge

தமிழக அரசின் சார்பில் அவ்வப்போது பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் நேற்று (16.07.2024) உத்தரவிட்டிருந்தார். இது குறித்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டிருந்த உத்தரவில், ‘தமிழக உள்துறை செயலாளர் அமுதா பணியிட மாற்றம் செய்யப்பட்டு தமிழகத்தின் புதிய உள்துறை செயலாளராக தீரஜ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு மற்றும் நுகர்வோர் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  சிட்கோ நிர்வாக இயக்குநராக இருந்த மதுமதி பள்ளிக்கல்வித்துறை செயலாளராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளராக அமுதா நியமிக்கப்பட்டுள்ளார். கால்நடை மற்றும் மீன்வளத்துறை செயலாளராக கோபால் நியமிக்கப்பட்டுள்ளார். தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் குமார் ஜெயந்த் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையராகக் குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார். 

New Commissioner of Chennai Corporation takes charge

மேலும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக சந்திரகலாவும், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக அருணாவும் நீலகிரி மாவட்ட ஆட்சியராக லஷ்மி பையா தன்னீரும், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக பிரியங்காவும் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக ஆகாஷூம் நியமிக்கப்பட்டனர்.

அதே போன்று அரியலூர் மாவட்ட ஆட்சியராக ரத்தினசாமியும், கடலூர் மாவட்ட ஆட்சியராக ஆதித்யா செந்தில்குமாரும், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக அழகுமீனாவும், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக கிரேஸ் லால்ரிண்டிகி பச்சாவ்வும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக சிம்ரன்ஜீத் கலோனும் நியமிக்கப்பட்டனர்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு தமிழகம் நேற்று ஒரே நாளில் முக்கிய துறைகளின் செயலாளர்கள் உள்பட 65 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர். 

New Commissioner of Chennai Corporation takes charge

இந்நிலையில் கூடுதல் தலைமைச் செயலாளரும், சென்னை மாநகராட்சி ஆணையருமான ஜெ. ராதாகிருஷ்ணன் தனது பொறுப்புகளை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்ட குமரகுருபரனிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையராக குமரகுருபரன் பொறுப்பேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்