Skip to main content

பழங்குடியினர் கோயில் திருவிழா; அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு!

Published on 27/08/2024 | Edited on 27/08/2024
Minister Meyyanathan participates in tribal temple festival

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் வடக்கு அறிவொளி நகர் பழங்குடியினர் காலனியில் (நரிக்குறவர் காலனி) சுமார் 100 குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்களின் குலதெய்வமான மதுரை வீரன், காளியம்மன், மீனாட்சி அம்மன் திருவிழா சில நாட்களுக்கு முன்பு குளிர்பானத்தை தரையில் ஊற்றி முரண்பாடு தீர்த்த பிறகு பெருமாள் பூஜை, பொங்கல் திருவிழாவுடன் தொடங்கியது. 

வழக்கம்போல் கீரமங்கலம் அறிவொளி நகர் மக்கள் மட்டுமின்றி பல கிராமங்களைச் சேர்ந்தவர்களும் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக கீரமங்கலத்தில் தனித்தனியா குடில் அமைத்து பூஜை நடத்தி வருகின்றனர். அறிவொளி நகர் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரித்து இரவு கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். திங்கள் கிழமை இரவு பொங்கல் விழா நடந்தது. இதில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார். ஆட்டம், பாட்டம், வான வேடிக்கைகளுடன் அமைச்சரை வரவேற்ற அறிவொளி நகர் மக்கள் அமைச்சருக்கு பாசிமணி மாலைகளை அணிவித்தும், கைகள் கொடுத்தும் மகிழ்ந்தனர். 

Minister Meyyanathan participates in tribal temple festival

அப்பகுதி மக்கள், “எங்க தெருவில் கல்யாணம், காதுகுத்து, திருவிழா எல்லா விழாக்களிலும் நாங்கள் அழைக்கவில்லையென்றாலும் எந்த பாகுபாடும் பார்க்காமல் எங்கள் அமைச்சர் கலந்துகொள்வதே எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்கின்றனர். திருவிழா மேடையில் பேசிய அமைச்சர் மெய்யநாதன், “உற்றார் உறவினர்களுடன் மிக மகிழ்ச்சியோடு நடக்கும் இந்த திருவிழாவில் என்னையும் அழைத்ததற்கு நன்றி. விரைவில் அனைவருக்கும் வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த ஆண்டு திருவிழாவில் அனைவருக்கும் புத்தாடைகள் வழங்கப்படும்” என்றார். இதனையடுத்து அறிவொளி நகர் மக்கள் விசிலடித்தும், கைகளைத் தட்டியும் ஆராவாரம் செய்தனர்.

செவ்வாய்க் கிழமை(26.8.2024) மாலை கீரமங்கலம் மெய்நின்றநாத சுவாமி ஆலயத்திலிருந்து மேளதாளம், வானவேடிக்கை, ஆட்டம் பாட்டத்துடன் ஏராளமானோர் பால்குடங்கள் பறவைக்காவடி, வேல்காவடி எடுத்துச் சென்றனர். இந்த நிகழ்ச்சியில் உள்ளூர் மற்றும் வெளியூர்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இரவு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து புதன்கிழமை எருமை, ஆட்டுக்கிடாய்கள் வெட்டும் பூஜையும், வியாழக்கிழமை மது எடுப்புத் திருவிழாவும் நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை கீரமங்கலம் வடக்கு அறிவொளி நகர் மொதுமக்கள் செய்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்